tamilnadu

img

சவத்தின் மீது ஆட்சி நடத்தலாமா? இரா.வேல்முருகன்

குடி உயரக் கோல் உயரும் என்பார்கள். ஆனால், குடியை அழித்து அதன் மீது ஆட்சி நடத்துவது மக்களாட்சிக்கு அழகல்ல. அரசு, அதிகாரிகள், நீதிமன்றம், காவல்துறை, சட்டமன்றம் இவையனைத்தும் இந்த நாட்டில் உள்ள மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை  பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குதான். அதற்கு மாறாக மக்களை அழித்தொழிப்பதாக இருக்குமானால் அது அரசு அல்ல அதற்கு பெயர் வேறு...

சம்பவம் 1. 2022 மே மாதம் 8 ஆம் தேதி மயிலாப்பூர் தொகுதி, ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் பெரிய புல்டோசர்களுடன் ஆயிரக்கணக்கில் போலிஸ்காரர்கள், நூற்றுகணக்கான அதிகாரிகள் குவிந்தனர். அங்குள்ள மக்களின் அலறல் சென்னை நகர மக்களை உலுக்கியது. அது ஆட்சியாளர்களுக்கு மட்டும் சங்கீதமாக இருந்ததா என்னவோ தெரியவில்லை. இளங்கோ தெருவில் உள்ள 625 வீடுகளை இடிக்க வேண்டும். அந்த வீடுகள் நீர்வழிக் கரையில் உள்ளது என 2009 ஆம் ஆண்டு ராஜீவ் ராய் எனும் ரியல் எஸ்டேட் முதலாளி போட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வருகிறது.

அப்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறை இந்தப் பகுதிகளை அளந்து 625 வீட்டில் 366 வீடுகள் மட்டுமே பக்கிங்காம் கால்வாய் தெற்கு கரையில் உள்ளது. எஞ்சிய 259 வீடுகள் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என அறிக்கை கொடுத்தது. 2014 ஆம் ஆண்டு 366 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். எஞ்சிய 259 வீடுகளையும் இடிக்க வேண்டும் என ராஜீவ்ராய் உச்சநீதிமன்றத்திற்கு போகிறார். அப்போது (2019 ஆம் ஆண்டு) தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவராக இருந்த தர்மேந்திர பிரதாப் ஐஏஎஸ், இந்த இடம் 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசைப்பகுதி என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், இது பொது நலத்திற்காக போட்ட வழக்கு அல்ல. ராஜீவ்ராய் என்று முதலாளி தன்னுடைய லாபத்திற்காக, தனது அப்பார்ட்மென்ட்டின் சந்தை மதிப்பை உயர்த்த போட்ட வழக்கு என்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கினார்.

 

இவ்வளவு நடந்த பிறகும் நீதிமன்றம் 259 வீடுகளை இடித்தே ஆக வேண்டும் என சொல்கிறது. அரசும் அப்பகுதியை யுத்த பகுதியாக மாற்றுகிறது. 10, 12வது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கும் இந்த நேரத்தில் பலவந்தமாக தங்களது வீடுகளை இடிப்பதை தடுக்க மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அரசு அதிகாரிகளும் காவல்துறையும் கல் நெஞ்சத்தோடு வீடுகளை இடித்து தரைமட்டமாக்க தொடங்குகிறது. இந்த வேதனையை பொறுக்காமல் கண்ணய்யன் என்பவர் அதே இடத்தில் பெட்ரோல் ஊற்றி தன்னைத்தானே எரித்துக் கொள்கிறார். உடல் வெந்து தோல் உறிந்து தொங்குகிற அந்த நிலையிலும் "இந்த ஊமை மக்களை காப்பாற்றுங்கள்" என கூறிக்கொண்டே இருக்கும்போது, அந்த அபலையின் உயிர் பிரிகிறது. செத்தவன் ஏழை என்பதால் அரசும் அதிகாரிகளும் நிவாரணமாக 10 லட்சத்தை அறிவித்துவிட்டு மீண்டும் அந்தவீடுகளை இடித்திடவே துடிக்கிறது.

சம்பவம் 2. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், படப்பையை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் நரியம்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக 300 எக்டேர் அரசு புறம்போக்கு நிலத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களை வெளியேற்ற ஒரே வாரத்தில் இரண்டு முறை வருவாய் துறை நோட்டீஸ் கொடுக்கிறது. தூத்துக்குடியில் இருந்து வாழ்வு தேடி சென்னைக்கு வந்து கெளரவுமாக வாழ வேண்டும் என இடத்தை வாங்கிய மக்கள் இன்னும் வீட்டை முழுமையாக கூட கட்டி முடிக்கவில்லை. வாடகை கொடுக்கக் கூட வழியில்லாமல், அந்த வீட்டிலேயே இருந்து கொண்டு கட்டுமான வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்கின்றனர். இந்த நிலையில் வருவாய்த் துறையினரின் நோட்டீஸ் அந்த மக்களின் வாழ்வில் இடியாக மாறி உள்ளது. கனவுக் கோட்டை கண் முன்னே இடிக்கப் போகிறார்களே, குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி வாழப் போகிறோம் என்ற அச்சம், அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் ஒரு பெண் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். நோட்டீஸ் கொடுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் அந்தப் பெண் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார் என உறவினர்களும், ஊர் மக்களும் தெரிவிக்கின்றனர் .

சம்பவம் 3. விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரத்தின் அருகில் உள்ளது தந்தை பெரியர் நகர். அந்தப்பகுதி ஆக்கரமிக்கப்பு என்று  சிவகாசியில் உள்ள முதலாளிகள், வரி செலுத்துவோர் சங்கம் என்ற பெயரில் பொதுநல வழக்கை பதிவு செய்கின்றனர். ஏரியை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள் கட்டியுள்ளார்கள் என்றெல்லாம் பொய்யான தகவல்களை கொடுத்துள்ளனர். நீதிமன்றமும் அந்த பகுதியை இடித்து தள்ள தீர்ப்பு சொல்கிறது. அப்போது தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா குடியிருப்புகளை இடிப்பதில் ஆர்வமாக இருந்தார். விடிற்காலை 5 மணிக்கெல்லாம் பத்துக்கும் மேற்பட்ட புல்டோசர்களுடன் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், தாசில்தார் என நூற்றுக்கணக்கான அதிகாரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரோடு குடியிருப்புகளை இடிக்க வந்தனர்.

சிறுக சிறுக சேமித்து கட்டிய வீடு கண்முன்னே இடிக்கப்படுவதை தடுக்க முடியாமல், காண சகிக்காமல்  மனம் உடைந்த ஆட்டோ தொழிலாளி முத்துக்குமார் வீட்டின் மாடி மீது ஏறி பெட்ரோல் ஊற்றி தன்னைத்தானே எரித்துக் கொண்டு, அங்கிருந்து கீழே குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். அப்போதும் மனம் பதறாமல் ஆட்சியாளர்கள் மொத்த வீட்டையும் இடித்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். எந்த இடத்தை ஆக்கிரமிப்பு என்று வழக்கு போட்டு முதலாளிகள் இடிக்க வைத்தார்காளோ. அந்த இடத்தில் தங்களது நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தும் பார்க்கிங்காக மாற்றியுள்ளனர். இடித்த பிறகு அந்த இடத்தை ஏன் மீண்டும் நீர் நிலையாக மாற்றவில்லை? இப்போது இடிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் வீடுகள் இருந்த இடம் பிறகு பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்பாக மாற்றி ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு விருந்து வைக்கப்படும்.

நீதிமன்றமும் - நிர்வாகமும் ஏழைகளுக்கு எதிராக இருந்தால்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நீர்நிலைகள் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை நீதிமன்றம் செய்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நகர்மயமாதல் அதிகமாக உள்ளது. தமிழக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் நகரங்களில் வாழ்கின்றனர்.

நகரத்தில் கால்நடைகள் வளர்க்க தடை உள்ளது. கால்நடைகள் வளர்க்க முடியாத சென்னை போன்ற பெருநகரங்களில் மேய்ச்சல் நிலங்கள் எதற்கு? இந்த நிலங்களை வகைமாற்றி அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் சொன்னால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டாமா? எந்த நிலத்தையும் வகை மாற்றம் செய்ய அரசுக்கு உரிமை இல்லை என நீதிமன்றம் மிரட்டுகிறது. அரசும் கைகட்டி மவுனம் காக்கிறது. சட்டமும் நீதியும் மக்களுக்குத்தானே தவிர சில கார்ப்பரேட்டுகளுக்கு அல்ல. ஏரி என்றால், அங்கு தண்ணீர் வருவதற்கான வருவாய் கால்வாய், ஏரி நிரம்பினால் நீர் வெளியேறும் கலுங்கள் (ஓடை) பகுதி, ஏரியில் உள்ள நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த மதகுகள் இருக்க வேண்டும். இவை எதுவுமே இப்போது இல்லை. அதுமட்டுமின்றி இங்கு இருந்த விவசாய நிலங்கள் கான்கிரீட் வீடுகளாக மாறிவிட்டன. நீர் வரத்து கால்வாய் பெரிய பெரிய கட்டிடங்களாக காட்சியளிக்கின்றன. இப்படி எதுவுமே இல்லாத இந்த ஏரிக்கு நீர்வரத்துக்கான ஆதாரம் என்ன? நிரம்பிய நீர் வெளியேற என்ன வழி? எதுவுமே தற்போது கிடையாது. அப்படி இருக்க, மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஏரிகளை எப்படி பழைய முறைபடி அணுக முடியும்? இதுவரை ஆக்கிரமிப்பு என்று அகற்றிய எத்தனை பகுதிகளில் மீண்டும் நீர்நிலைகளாக மாற்றப்பட்டுள்ளது? அறிவியல் பூர்வமாக அப்படி மாற்ற முடியுமா?

பெரும் நிறுவனங்களுக்கு ஏரியை, ஆற்றை பட்டா போட்டு கொடுத்த போது அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்த நீதித்துறை ஏழை மக்களுக்கு மட்டும் வகை மாற்றி பட்டா கொடுக்கக் கூடாது, அப்படி வகை மாற்றினால் தலைமை செயலாளரை நீதிமன்றத்திற்கு அழைப்போம் என மிரட்டுகிறது. அப்படியென்றால் நீதி என்ன பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தானா? நீதிமன்றம் நேர்மையாக செயல்படுகிறது என்றால் ஏரியை, ஆற்றை பெரிய நிறுவனங்களுக்கு வகை மாற்றி பட்டா போட்டதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கலாமே. ஏன் எடுக்கவில்லை ?

வீடற்றவர்களாக ..

தமிழகத்தில், அரசு புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, மேய்க்கால் புறம்போக்கு, அனாதினம், சமய நிலங்கள், பாதுகாப்புத்துறை, பல்கலைக் கழக இடங்கள், வனத்துறை இடங்கள், கழுவெளி, சதுப்பு நிலம், கால்வாய் கரையோரம், ரயில்வே நிலம், தனியார் நிலம்  மற்றும் அரசின் பலவகை புறம்போக்கு நிலங்களில் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. மூன்று நான்கு தலைமுறைகளாகவும், பல பத்தாண்டுகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு என கூறி, எந்த வகை நிலமாக இருந்தாலும் இடிப்பது தர்மமாகுமா?

40 ,50 ஆண்டுகளாக மூன்று நான்கு தலைமுறைகளாக அந்த இடங்களை மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியானதாக மாற்றி, கொஞ்சம் கொஞ்மாக சேமித்து கட்டிய அந்த சொத்து மதிப்ப்பு தற்போதைய சந்தை நிலவரப்படி பல கோடியில் உள்ளது . அரசாங்கம் அந்த வீட்டை இடித்து விட்டு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 300 சதுர அடி கூட இல்லாத ஒரு வீட்டை கொடுக்கிறது. அதற்கும் பணம் கட்ட வேண்டும் என்கிறது. இடிக்கப்பட்ட இடத்திற்கு எந்த நிவாரணமும் வழங்க மாட்டோம் என்பதுதான் நீதியா? வீடுகளை இடித்த இடங்களை இடித்து என்ன செய்ய போகிறீர்கள்? சிவகாசி தந்தை பெரியார் நகரில் வழக்கு போட்டு இடிக்க வைத்த முதலாளிகளுக்கு கொடுத்ததை போல் பணம் படைத்தவர்களுக்கு பந்தி வைக்க போகிறீர்களா?

வல்லூறுகள் கோழிக் குஞ்சை தூக்குவதை போல் இல்லாமல் குஞ்சுகளை பாதுகாக்கும் கோழியை போல் மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். சென்னை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் நீண்ட காலமாக புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கொள்கை முடிவு எடுத்து, நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். அதுவே மக்கள் நல அரசாக இருக்கும்.

-இரா.வேல்முருகன்

;