tamilnadu

img

4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக கோரிக்கை மனு அளித்துள்ளது. தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் 18.4.19 அன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுடன் சூலூர் தொகுதியும் சமீபத்தில் சேர்ந்துகொண்டது. இதனால் நான்கு தொகுதிகள் காலியான சட்டப்பேரவைத் தொகுதிகள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 4தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்தவேண்டும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவிடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மனு அளித்தனர். பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் என 4 தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தலின் போதே இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்தவேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். குஜராத்திற்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் தமிழகத்துக்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் இருந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. திமுகவின் பொருளாளர் துரைமுருகன் வீட்டில், மாலை 6 மணிக்கு மேல் வருமானவரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டது தவறு. பாஜகவும் அதிமுகவும் இப்படியெல்லாம் மிரட்டி, வெற்றியைத் தடுக்கப் பார்க்கிறது. திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது உறுதி. இவ்வாறு ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

;