tamilnadu

img

களத்திலும் நீதிமன்றத்திலும் ஒன்றுபட்டு போராடி வென்ற பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.... வெற்றிக்கனியை பறித்த வர்க்கக் கூட்டணி....

கூட்டு பேர உரிமையே தொழிற்சங்க அமைப்புகளின் வலுவான ஆயுதமாகும். ஊசலாட்டமில்லாத வர்க்க கண்ணோட்டத்தோடும், தெளிவான திட்டமிடல்களோடும் கூடிய போராட்டக் களங்களுக்கு திட்டமிடுகிற போது நிச்சயமாக வெற்றி உழைப்பாளிகளுக்கே என்பது வரலாற்றில்  மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆம். இம்முறை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தான் அத்தகையதொரு மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில் பணியாற்றும் சுமார் 5000 ஒப்பந்த ஊழியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுக்கு கிடைக்காத ஊதிய நிலுவைதொகை ரூபாய் 35 கோடியை தங்கள் நெடியபோராட்டத்தின் விளைவாக பெற்றிருக்கிறார் கள். தமிழக தொழிற்சங்க வரலாற்றில் இது குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும்.

இரண்டு ஆண்டுகள்நிறுத்தப்பட்ட ஊதியம்
பி.எஸ்.என்.எல் எனும் வலுவான பொதுத்துறை நிறுவனத்தை சீரழிப்பது எனும் முடிவைஎடுத்த மத்திய அரசு, அந்நிறுவனத்திற்கு இன்றுவரை 4 ஜி சேவையை வழங்காமல்இருப்பது, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை விருப்ப ஓய்வு எனும் பெயரால் கட்டாயப்படுத்தி ஓய்வு பெறச்செய்தது, அந்நிறு வனத்தின் பல்வேறு சேவைகளையும் காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் எனும் பெயரால் தனியாருக்கு அளித்தது, பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு முறையாக ஊதியம்வழங்க மறுப்பது என ஒவ்வொரு முயற்சியையும் நிறுவனத்திற்கு எதிராகவும், ஊழியர்களுக்கு எதிராகவுமே அமலாக்கி வருகிறது. இத்தகைய முயற்சிகளில் ஒன்றாகத்தான் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமலேயே இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இது ஏதோ ஓரிரு மாதங்களுக்கான நிலுவையல்ல. முழுதாக இரண்டுஆண்டுகளுக்கான ஊதியம் முற்றாகநிறுத்தப்பட்டது.  கேட்டால் பணிகள் முழுவதும்ஒப்பந்த அடிப்படையில்  வழங்கப்பட்டுவிட்டதால், ஊதியம் குறித்த பிரச்சனைகளிலெல் லாம் நிறுவனம் நேரடியாக தலையிட முடியாதுஎன சொத்தை வாதத்தையும் வேறு முன்வைத்தது.

நிறுவனத்தின் இத்தகைய ஆணவப்போக்கையும், பாராமுக நடவடிக்கைகளை யும் கண்டித்தும், ஊதிய நிலுவையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் தொடர் போராட்டங்களுக்கு திட்டமிடப்பட்டன. உள்ளூர் தொலைபேசி நிலையங்களில் துவங்கி, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மக்கள் கூடுகிற இடங்கள், சென்னையில் தலைமை அலுவலகங்கள் என பல்வேறு இடங்களும் போர்க்களங்களாயின. ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், முற்றுகை போராட்டங்கள், தொடர் காத்திருப்பு, குடும்பத்துடன் அலுவலகங்களில் குடியேறுவது என கடந்த ஓராண்டாக பல்வேறு வடிவங்களிலான போராட்டங்கள் நடைபெற்றன. ஒப்பந்த ஊழியர்களை அமைப்பாக அணிதிரட்டுவதும், அவர்களுக்கான போராட்டக்களங்களை தயார் செய்வதும்ஒரு நிரந்தர உதவியாக மட்டுமே இருக்க முடியாது. அது வர்க்க கடமையின் பிரிக்க முடியாதபகுதி எனும் உணர்விலிருந்து நிரந்தர ஊழியர்களுக்கான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கமும் ஒவ்வொரு கட்டத்திலும் மிக முக்கியமான பங்கை ஆற்றியதுடன் முழுமையாக களத்திலும் நின்றது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் சங்கமும் கூட இத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவளித்தன.

களத்திலும் நீதிமன்றத்திலும் போராட்டம்
இத்தகைய சக்திமிக்க போராட்டங்களால், இறுமாப்போடு இருந்த நிர்வாகம் சற்றே இறங்கி வந்து பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றது. ஆனாலும் கூட கோரிக்கையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமில்லை என்ற காரணத்தால் களப்போராட்டங்களோடு நீதிமன்ற தலையீடுகளையும் மேற்கொள்வ தென்ற முடிவும் எடுக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத்அவர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜராகி வாதாடினார். தொழிற்சங்கங்களின் வலுவான தொடர்  போராட்டங்கள், அத்துடன் இணைந்த நீதிமன்ற தலையீடு என இரு முனைகளிலும் மேற்கொண்ட முயற்சிகளின் மூலமாக தற்போது தொழிலாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கடந்த நவம்பர் 13 அன்று 1857 தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே பத்து லட்சமும், இந்தாண்டு ஏப்ரல் 3 அன்று 2902 தொழிலாளர்களுக்கு ரூபாய் எட்டு கோடியே நாற்பது லட்சமும், ஏப்ரல் 20 அன்று 4668 தொழிலாளர்களுக்கு ரூபாய் இருபது கோடியே ஐம்பது லட்சமும் என மொத்தம் 35 கோடி ரூபாய்  தொழிலாளர்களின்  ஊதியநிலுவை பெறப்பட்டுள்ளது.

தொழிற்சங்கமும் தொழிலாளர் ஒற்றுமையும்
நிலுவையில் உள்ள ஊதியம் கிடைக்குமா,நெருக்கடியிலிருந்து மீள்வோமா எனும் கேள்விகளோடு இருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு நம்பிக்கை ஊட்டி, வர்க்கப் பார்வையை வலுப்படுத்தி போராட்டங்களில் உற்சாகத்தோடு பங்கேற்க வைத்தும், சென்னையில் நடைபெற்ற போராட்டங்களில் தொழிலாளர்கள் பங்கேற்பதற்கான நிதியை ஏற்பாடுசெய்தும்,  ஏற்கனவே இருந்த ஊதிய நிலுவைபிரச்சனையோடு கொரோனா நெருக்கடியும் சேர்ந்து கொண்ட போது ஒப்பந்த ஊழியர்களின் பரிதவிப்பை உணர்ந்து அவர்களுக்கு உதவும் வகையில் ரூபாய் 25 லட்சம் திரட்டியும் இந்த காலம் முழுவதும் பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் சங்கத் தோழர்கள் ஒப்பந்த ஊழியர்களோடு இரண்டற கலந்தே நின்றார்கள். தொழிற்சங்கங்களின் இணைந்த போராட்ட நடவடிக்கைகளும், தொழிலாளர்களின்  வர்க்க ஒற்றுமையுமே இந்த மகத்தான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகும்.

தொழிலாளர்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்துவதற்காக, நிரந்தர வேலைகளை ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங்,  என்பதாகபல வடிவங்களில் மாற்றி, நிரந்தர ஊழியர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் பிரிக்க ஆளும் வர்க்கம் சூழ்ச்சி செய்தாலும், வலுவான வர்க்க ஒற்றுமையோடு இருவரும் ஒன்றிணைந்து களத்தில் நின்றால் வெற்றி உழைப்பாளிகளுக்கே என்பதை இக்கூட்டு போராட்டங்கள் உணர்த்தியிருக்கின்றன. அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள், இதர பகுதி உழைப்பாளிகளையும் முனைப்போடு திரட்டினால் தான் ஆளும் வர்க்கங்களையும், சுரண்டும் மூலதனத்தின் தாக்குதலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை இத்தகைய அனு பவங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கின்றன.

தொகுப்பு : ஆர்.பத்ரி

;