articles

img

புதிய சூழலில் வலுப்பெறும் வர்க்கக் கூட்டணி.....

மார்க்சிய மேதை  மாசேதுங் எழுதினார்: “ஒரு பொருளுக்குள் உள்ள எதிரும் புதிருமான முரண்பாட்டுத் தன்மை அதன் வளர்ச்சிக்கான அடிப்படையாக உள்ளது”. இந்தக் கோட்பாடு இன்றைய இந்திய விவசாயத்திற்கும், தொழில் துறைக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.  மாசேதுங் குறிப்பிட்ட முரண்பாடு பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை இந்திய விவசாயத்தில் பொருத்திப் பார்த்தால்ஒரு முக்கியமான முடிவுக்கு வர இயலும். இன்று, பெரு முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் ஒட்டுமொத்த விவசாய வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. அதன் விளைவாக ஒரு பெரும் வளர்ச்சி மாற்றம் உருவாகும் நிலை உள்ளது என்பதையும் தெளிவாக அறிய முடியும். 

 ஏகபோக தொழில் நிறுவனங்களின் இலாபக் குவியலுக்கு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் சிறு குறு நடுத்தரத் தொழில்கள் அழிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பெரு முதலாளிகளுக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டு, தொழில் நடத்துகிற நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் பிரிவினருக்கும், முரண்பாடு தீவிரம் பெற்றுள்ளது.

 மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறிக்கை, தீவிரமடைந்து வரும் இந்த வர்க்க முரண்பாட்டை விளக்குகிறது. விவசாயத்திலும், தொழில் துறையிலும் வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. இதனால் சோசலிசப் புரட்சிக்கு உந்து சக்தியாக விளங்குகிற தொழிலாளி - விவசாயி வர்க்கக் கூட்டணி வலுப்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று மத்தியக் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“சர்வதேச நிதி மூலதனத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் பெரு முதலாளிகள் ஒருபக்கமும், ஒட்டுமொத்த விவசாய வர்க்கம் இன்னொரு பக்கமும் என முரண்பாட்டை கூர்மையடையச் செய்துள்ளது. பெரும் விவசாயிகள் பணக்கார விவசாயிகள் மற்றும் பிறர் என எல்லா விவசாயிகளும் ஒரே அணியில் சேர்ந்துள்ளனர்.” 

என்று மத்தியக் குழு அறிக்கை விவசாயிகள் போராட்டத்தை முன்னிறுத்தி,இன்றைய முரண்பாடு பற்றிய விளக்கத்தை அளித்துள்ளது.

பொய்கள்,புரட்டுக்களை தகர்த்து... 
இந்த முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை காண முடியும்.விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிற இந்தக்காலம் முழுவதும் அரசு தரப்பிலும் அரசுக்கு ஆதரவாக இருக்கிறஅறிவுஜீவிகள், ஊடகங்கள் தரப்பிலும் அடுக்கடுக்காக பொய்யான விவரங்கள், கட்டுக்கதைகள் என ஏராளமாகபிரச்சாரம் செய்யப்பட்டன. ஆனால் அவற்றை விவசாயிகள்நம்பிடாமல், அனைத்தையும் நிராகரித்து உறுதியான போராட்டப் பாதையில் பயணித்து வருகின்றனர்.இதுவே விவசாயத்துறையில் உள்ள முரண்பாட்டின் தீவிரத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.

“போராடுகிற விவசாயிகள் வருமானம் ஈட்டுகிற பகுதியினர் . அவர்கள் மேல்தட்டில் உள்ள இரண்டு சதவீதமான பணக்கார விவசாயிகள்; அவர்கள் நலனுக்காகத்தான் போராடுகிறார்கள்..அடித்தட்டு விவசாயிகளின் நலனுக்காக அல்ல..” என்பது போன்ற வாதங்களை முன்வைத்து, போராடும் விவசாயிகள் இடையே பிளவு ஏற்படுத்த முயற்சி செய்தனர். பல ஆளும் கட்சி ஆதரவுஊடகங்களும் இதுபோன்று பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில் விவசாயம்,பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் யாருக்கு பலன் கிடைக்கும்? மேல்தட்டு, அடித்தட்டு விவசாயிகள் யாராக இருந்தாலும் ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்கு உட்பட்டுத்தான் விவசாயம் செய்ய முடியும். 

“பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை முறையினால் மிகுந்த லாபம் கண்டவர்கள். எனவேதான் வேளாண் சட்டங்களை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள்”என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. குறைந்தபட்ச ஆதார விலை முறை கொண்டுவரப்பட்ட நோக்கமே விவசாயிகளைப் பாதுகாப்பதுதான். இதனை மேலும் பலப்படுத்தினால் பஞ்சாப் விவசாயிகள் மட்டுமல்ல; அனைத்து மாநில விவசாயிகளும் விவசாயமும் பாதுகாக்கப்பட்டு உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அந்த முறையை ஒழித்துக் கட்டுவது ஏற்கனவே அதனால் ஓரளவு பலன் பெற்றவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். 

இவ்வாறு, இலாபம் அடையும் பஞ்சாபிய விவசாயிகள், இலாபம் பெறாத இதர மாநில விவசாயிகள் என்கிறமுறையில் பிளவுபடுத்துகிற வேலையையும் அறிவுஜீவிகளும் ஆளும் தரப்பும் பிரச்சாரம் செய்து வந்தனர்.இதுவும்  எடுபடவில்லை.“ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட முறையில் வேளாண் உற்பத்திப் பொருள் விற்பனை கமிட்டி மற்றும்குறைந்தபட்ச ஆதார விலை முறையையும் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரம் இருக்கிறது; எனவே அவர்கள் அவர்களுக்கு எது தேவையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறபோது போராட்டத்திற்கு உருப்படியான கோரிக்கையே இல்லை; போராட்டமே தேவையில்லை” என்று பிரச்சாரம் செய்தனர். 

கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டங்களால்  விவசாயத்தில் வலுமிக்க மேலாதிக்கத்தை செலுத்துவதற்கு ஏகபோக கார்ப்பரேட்டுகளுக்கு இடமே இல்லை என்பது போலவும் விவசாயிகளுக்கு எல்லா சுதந்திரமும் இருப்பது போலவும் எழுதி வருகிற அறிவுஜீவிகள் உண்மையில் விவசாயிகளை ஏமாற்ற நினைக்கின்றனர். இப்படிப்பட்ட வாதத்திலும் எந்த அடிப்படையும் இல்லை. ஏகபோக கார்ப்பரேட் மேலாதிக்கம் விவசாயத்தில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு விவசாயிகளின் குரலுக்குமதிப்பிருக்காது.எந்த எதிர்ப்புகளுக்கும், எந்த வாய்ப்பும் இருக்காது; வல்லான் வைத்ததே சட்டம் என்கிற நிலைஏற்பட்டு விவசாயத்தில் பெருமுதலாளிகளின் கொடுங்கோன்மை நிலவும். இதையெல்லாம் விவசாயிகள் புரிந்து கொண்டுள்ள காரணத்தினால்தான் எவ்வளவு காலம் ஆனாலும் எத்தனை தியாகங்கள் செய்ய நேரிட்டாலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடர்வது என்று முடிவெடுத்துள்ளனர்.

ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயம் கொண்டுவரப்பட்டால் விவசாயிகள் நிலத்தை இழக்க நேரிடும் என்கிற அச்சத்தை விவசாயிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.இதனைக் குறிப்பிட்டு “வேளாண் சட்டங்களில் நிலத்தை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற ஷரத்து எங்கே இருக்கிறது?..காட்டுங்கள்.. பார்க்கலாம்.. ” என்று விதண்டாவாதம் செய்கின்றனர். “வேண்டுமானால் நாங்கள் கார்ப்பரேட்களிடம் நிலத்தை விற்க மாட்டோம் என்று முடிவெடுத்து விவசாயிகள் உறுதியாக நிற்கட்டும். யார் வேண்டாம் என்பது?”என்றெல்லாம் ஏகடியம் பேசுகின்றனர்.(மிண்ட் இணைய இதழில் சுர்ஜித் பெல்லா பேட்டி;8-2-2021).

மூன்று சட்டங்களும் உண்மையில் விவசாய உற்பத்தி, விற்பனை என அனைத்து நிலைகளிலும் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் தீர்மானிக்கிற இடத்தில் இருக்கிற போது விவசாயிகளால் எப்படி முடிவெடுக்க இயலும்?இந்த பசப்புகளும் பிரச்சாரங்களும் பல மாதங்களாக நடந்து வருகிறது. ஆனால் விவசாயிகள் இதில் ஏமாற தயாராக இல்லை.அதனால்தான் இந்திய நாடு முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

போராட்டத்தைப் பற்றி ஆயிரமாயிரம் பொய்களையும் கட்டுக்கதைகளையும் அவதூறுப் பிரச்சாரத்தையும். அவிழ்த்துவிட்ட போதும், போராடுகிறவர்கள் மீது பொய்வழக்கு சிறை, வன்முறைகளை  பிரயோகித்த போதும் ஏன் விவசாயிகள் போராட்டம் உறுதியுடன் முன்னேறி வருகிறது? இதற்கு,பெரு முதலாளிகளுக்கும் அனைத்துப் பிரிவு விவசாயிகளுக்கும் முரண்பாடு தீவிரமடைந்துள்ளது என்ற மத்தியக்குழுவின் தெட்டத் தெளிவான கருத்தே விடையாக அமைந்துள்ளது.மேல்தட்டு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் என்கிற வகையில் பிளவுபடுத்தும் முயற்சிகளும் எடுபடவில்லை. ஒட்டுமொத்த விவசாயப் பிரிவினருக்கும் ஆளும் பெரு முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் இடையேயான முரண்பாடு கூர்மைப்பட்டு இருப்பதுதான் இதற்கு காரணம்.

விவசாய நெருக்கடி
ஒரு நாளில் சராசரியாக இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நெருக்கடியின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. விவசாயம் கட்டுபடியாகாத நிலையில் உள்ளதால் இந்த நிலைமை தொடர்கிறது.விளை பொருட்களுக்கான விலைகள் போதுமான அளவில் இல்லாத நிலையில் விவசாயிகளுடைய வாழ்க்கை வேதனை வாழ்க்கையாக அமைந்துள்ளது.86 சதமான விவசாயக் குடும்பங்கள் இரண்டு ஹெக்டேருக்கும்  குறைவான நிலத்தை உடைமையாக கொண்டுள்ளனர்.அவர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் விவசாயத்தை விட்டு இடம்பெயர் தொழிலாளர்களாக மாறும் நிலைமையை மோசமான சந்தை நிலைமைகள் ஏற்படுத்தியுள்ளன. இந்த விவசாய நெருக்கடி நிலைமைகளை பெரும் கார்ப்பரேட்டுகள் விவசாயத்தினை தங்களுக்கு ஏற்றவாறு உருமாற்றி, கொள்ளை லாபம் அடைய திட்டம் தீட்டி வருகின்றனர்.

“உலக அளவில் முதலாளித்துவ நெருக்கடி நீடிக்கிறது, இந்தியப் பொருளாதாரம் கடும் மந்த நிலையை எதிர்கொண்டுவந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றும் அதன் பேரால் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கும் பொருளாதாரத்தை கடுமையாகப்பாதித்துள்ளன. ஆனால், இந்தப் பின்னணியிலும் கூட, இந்திய பெருமுதலாளிகளின் லாபம் தடைபடக் கூடாது என்ற நோக்கத்தில் ஆளும் வர்க்கங்கள் செயல்படுகின்றன.” 

என மத்தியக் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“பெரு முதலாளிகளுக்கும், அவர்கள்அல்லாத பிற முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடும், பாஜகவிற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக பரந்தஒற்றுமையை கட்டமைக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.” 

என தற்போது எழுந்துள்ள வாய்ப்பை மத்தியக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தீவிரமடைந்துள்ள இந்த முரண்பாட்டினை தொழிலாளி வர்க்கமும், ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும். முதலாளித்துவ - நிலவுடைமையையும், அவர்களது வர்க்க ஆட்சியையும் எதிர்த்த வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த முடியும்.  இந்திய பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் நடத்தும் போராட்டங்கள் மேலும் உறுதிப்படும் வாய்ப்புகள் இன்று ஏற்பட்டுள்ளன.இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி தொழிலாளி- விவசாயி வர்க்க ஒற்றுமையை மேலும் வலுவாக்குவதே முக்கியக் கடமை. 

கட்டுரையாளர்: என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;