tamilnadu

img

ஒரே அம்பில் இரண்டு எதிரிகளை வீழ்த்துங்கள்!

மதுரை, ஏப்.6-விஷத்தன்மை கொண்ட பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டத்தையும் அவர்களோடு தமிழகத்தில் கூட்டணி வைத்துள்ள அதிமுக-வையும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து யா.ஒத்தக்கடை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பிருந்தாகாரத் பேசியதாவது:-வாக்காளர்கள் ஒரே அம்பில் இரு எதிரிகளை வீழ்த்த வேண்டும். ஒரு எதிரி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக. மற்றொரு எதிரி தமிழகத்தை ஆட்சிசெய்யும் அதிமுக.தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் "லேடியா" அல்லது "மோடியா" என கேள்வியெழுப்பி பிரச்சாரம் செய்தார். மோடி தேவையில்லை என உறுதிபடக் கூறினார். அவரது ஆட்சியை நடத்துவதாகக் கூறும் ஓபிஎஸ்-இபிஎஸ் எங்களுக்கு மோடி என்ற "டாடி" தான் தேவை என்கின்றனர். டாடியின் கையை பிடித்துக் கொண்டு ஓபிஎஸ்-இபிஎஸ் வலம் வருகின்றனர். மோடி தம்மைப் பாதுகாப்பார் என இபிஎஸ் நம்புகிறார்.மோடி ஆட்சியால் நாட்டிற்குப் பலனில்லை. அவர் மக்களுக்கு தீங்கிழைத்து வருகிறார் என்ற முடிவிற்கு இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்கள் வந்துவிட்டனர். மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என்ற "ஒரே நோக்கத்தில்" அனைத்துக் கட்சிகளும் உள்ளன.நாட்டின் பாதுகாப்பை, மதச்சார்பின்மையை, பன்முகத் தன்மையை சீரழித்த பாஜக-வை தேர்தலில் வீழ்த்த வேண்டும். நடைபெறக்கூடிய தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதிநிதியாக, அதன் முகமாக உள்ள பாஜக-வை வீழ்த்த வேண்டும். பாபாசாகிப் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் மீது பாஜக-விற்கு நம்பிக்கையில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் விடுதலைப் போராட்டத்தால் உருவாக்கப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், தலித்துகள் என அனைத்துத் தரப்பு மக்களும் போராடினார்கள். அப்போது பாஜக-வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் எங்கே சென்றன? விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத இவர்கள் தேசபக்தி குறித்து பேசுகிறார்கள்.


மக்களின் ஒற்றுமையும், நாட்டின் பன்முகத்தன்மையும் தான் இந்தியாவின் இதயம். ஐந்தாண்டுகால பாஜக ஆட்சியில் பாரம்பரியமிக்க வரலாற்றை அழித்தொழிக்க முயற்சி நடைபெற்றது. ஒரு மதம், ஒரே மொழி என்ற ஒற்றைக் கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது. அரசியல் சட்டத்தை மாற்றவேண்டுமென கொக்கரிக்கிறது.அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க இடதுசாரிகளும்-மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன.கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் 37 பேர் வெற்றி பெற்றுச் சென்றார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? மக்களுக்காக பேசினார்களா? மோடியின் கொள்கையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது வாய் மூடி மௌனியாக இருந்தார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் அதிமுக என்ற தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பசையை சட்டைப் பையிலேயே வைத்திருப்பார்கள். நாடாளுமன்ற கூட்டத்தில் பசையால் வாயை ஒட்டிவைத்துக்கொண்டு மோடிக்கு எதிராகப் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.மதுரை நகரம் அழகான நகரம் மட்டுமல்ல. பெருமை வாய்ந்த நகரமும் கூட. இந்த நகரத்தின் குரலை எதிரொலிக்க, மக்களுக்காக உழைத்திட, போராட்டக் குணம் மிக்க, இந்த மண்ணை நேசிக்கும் மனிதர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவருக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெற்றிபெறும்.இவ்வாறு பிருந்தாகாரத் பேசினார். அவரது ஆங்கில உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தமிழாக்கம் செய்தார்.

;