புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம் முதலே இந்தியாவின் பொருளாதாரம் சரியத் துவங்கி விட்டது. ஜிஎஸ்டி அமலாக்கம் அதனை அதிகப்படுத்தியது. தற்போது கொரோனா கால பொதுமுடக்கம், பொருளாதாரத்தை இன்னும் மோசமாக்கி அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது.
2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 23.9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருப்பதை மத்திய அரசின் புள்ளியியல் அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அதைத்தொடர்ந்து வெளியான ஜிடிபி கணிப்புகளில், இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு 2020-21 நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடையும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ (Fitch Ratings) நிறுவனமும், 11.8 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ (India Ratings) நிறுவனமும் கணிப்புக்களை வெளியிட்டன. ‘கிரிசில்’ நிறுவனம் 9 சதவிகிதமும், ‘மூடிஸ்’ 11.5 சதவிகிதமும் இந்தியப் பொருளாதாரம் சரியலாம் என்று கூறின.இந்த வரிசையில், நடப்பு நிதியாண்டில்இந்தியப் பொருளாதாரம் 9 சதவிகிதம் வரையில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றுஎஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனமும் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் கொரோனாவின் பாதிப்பு நீடித்து வருவதால், அதன் தாக்கம் இந்த ஆண்டில்கடுமையாகவே இருக்கும் என எஸ் & பி குளோபல் நிறுவனம் தெரிவித்தது. நிதிப்பற்றாக்குறை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டியது.
இந்நிலையில், நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவிகிதம் வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கியும் (Asian Development Bank), ஜிடிபி விகிதம் 8.6 சதவிகிதமாக வீழ்ச்சி அடையும்என யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனமும் கணித்துள்ளன. “கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்து வதைப் பொறுத்தே பொருளாதாரம் மீட்கப்படும்” என்று ஏடிபி தெரிவித்துள்ளது.