ஆட்சியாளர்களால் பழங்குடியினர் புறக்கணிக்கப்பட்டு வருவது போலவே அவர்களுக்கான சட்டங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவற்றில் ஒரு சட்டம் இவ்வளவு மோசமாக கண்டுகொள்ளப்படாமல் வேறு எந்த சட்டமும் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆதிவாசி மக்களுக்கும் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் இதர பிரிவினருக்கும் வனஉரிமை வழங்கும் சட்டம் 2006 தான்அது. இச்சட்டம் அமலுக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது. தமிழ்நாட்டில் இச்சட்டம்அரசால் வேண்டா வெறுப்பாக அமல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. 2020 ஜனவரி 31 வரை 6387 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இச்சட்ட அமலா க்கத்தின் கதியை நாம் புரிந்து கொள்ளலாம்.
இதுவும் அவசியமான பணிதானே?
இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கென்று கிராம சபை, வனஉரிமைக் கமிட்டி, கோட்ட அளவிலான கமிட்டி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான கமிட்டி பிறகு தலைமைச்செயலாளர் தலைமையிலான மாநில அளவிலான கமிட்டி என்ற நிர்வாக ஏற்பாடு சட்டப்படி செய்யப்பட்டுள்ளது. இந்த கமிட்டிகள் கடந்த ஒரு வருட காலமாக கூடவில்லை. முதலில் அதிகாரிகள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணி என்றார்கள். பிறகு பட்ஜெட் தொடர்பான பணிகள் என்றார்கள். இப்போது கொரோனா தொடர்பான பணிகள் என்கிறார்கள். இவையெல்லாம் தவிர்க்க முடியாத முக்கியமான பணிகள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் இச்சட்ட அமலாக்கம் தொடர்பான பணிகளும் அவசியமான ஒன்றுதானே?
200 ஆண்டு காலப் போராட்டம்
வனத்தின் மீது யாருக்கு உரிமை என்ற போராட்டம் சுமார் 200 ஆண்டு காலம் நடைபெற்று, காடு மக்களுக்கு சொந்தம் என்று வரையறுத்துக் கூறும் சட்டம் தான் வனஉரிமைச்சட்டம் 2006. நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான பழங்குடி, மலைவாழ் மக்களுக்கு பலனளிக்கும் சட்டம். ஆனால் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லை. இதே காலத்தில் மலைப்பகுதியிலுள்ள கனிம வளங்களை பெருமுதலாளி களுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் வழங்குவதில் மகிழ்ச்சியாகவும் தீவிரமாகவும் செயல்பட்டுள்ளனர். தேசநலனுக்கு விரோதமான மக்களுக்கு விரோதமான திட்டங்களை யும், சட்டங்களையும் செயல்படுத்த எத்தனை யோ கூட்டங்கள் அதிகார வர்க்கத்தால் நடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.வனஉரிமைச் சட்டத்தை அமலாக்கும் மேற்படி கமிட்டிகள் கூடாததால் பலவிதமான இன்னல்களுக்கு மலைவாழ் மக்கள் ஆளாகியுள்ளனர்.
ஜவ்வாது மலையில்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் ஜமுனாமாத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கிராம மலைவாழ் மக்களிடம் உங்களுக்கு இன்னும் பட்டா வழங்கவில்லை. எனவே,இந்த ஆண்டு மட்டும் பயிர் செய்து கொள்கி றோம். மேற்கொண்டு உரிமை கோர மாட்டோம் என்ற நிபந்தனையுடன் கூடிய ஒரு படிவத்தை வனத்துறையினர் கொடுத்து மலைவாழ் மக்கள் பரம்பரையாக பயிர் செய்து வரும் நிலத்தில்அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை அவர்களே ஏற்றுக் கொள்ளும் வகையில் கையொப்பம் கேட்டனர். தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம் தலையிட்டு, அப்படி கையெழுத்துப் போட்டு கொடுக்க வேண்டாம். இது சட்டவிரோதம் என்று கூறி உயரதிகாரிகளிடம் புகார்செய்ததைத் தொடர்ந்து அதை வனத்துறை யினர் வலியுறுத்தவில்லை. திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை, கீழானூர் கிராமம், லோகநாதன் என்ற ஆதிவாசிதனது குடும்பத்திற்கு பரம்பரையாக சொந்த மான நிலத்தில் உழவுப்பணியில் ஈடுபட்டிருந்த போது திருப்பத்தூர் வனச்சரகத்தைச் சேர்ந்த கார்டு, வாட்சர்கள் அவரை தாக்கி காயமேற்படுத்தி, இது வனத்துறைக்கு சொந்தமான நிலம், இதில் பயிர் செய்யக் கூடாது என்று தடுத்துள்ளனர். கீழானூர் கிராம மக்கள் வனஉரிமைச் சட்டப்படி உரிமைக் கோரி மனு கொடுத்து அது அரசின் பரிசீலனையில் உள்ளது. கோட்ட அளவிலான கமிட்டி கூடாததால் முடிவு எட்டப்படவில்லை. இதையெல்லாம் அறிந்திருந்தும் வனத்துறையினர் ஆதிவாசிகளை அனுபவநிலத்திலிருந்து வெளியேற்றி துன்புறுத்த வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இது அவமானம் இல்லையா?
சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள்வாழ்ந்து வரும் ஒரு பகுதிக்கு சாலை வசதியேஇல்லாமல் இப்போது வரை தங்களது அனைத்துதேவைகளுக்கும் நடந்தே சென்றுவர வேண்டியஅவல நிலையில் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். அரசர்கள் ஆண்ட காலத்தில் சாலை போடவில்லை. அந்நியர்கள் ஆட்சி புரிந்த காலத்திலும்சாலை போடவில்லை. இதையெல்லாம் கூடசகித்துக்கொள்ளலாம். விடுதலை பெற்று 74வது ஆண்டு விழாவை நாடு கொண்டாடும் நிலையில் மக்களாட்சி நடைபெறும் காலத்திலும் இப்படியொரு பகுதி தமிழகத்தில் இருக்கிறது என்பது அவமானம் இல்லையா?
திருமூர்த்தி மலையில்
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலைக்கு மேல் மலைப்புலையர், முதுவர் பழங்குடியினர் வாழும் ஏழு செட்டில்மெண்ட் உள்ளது. மாவடப்பு, குழிப்பட்டி, காட்டுப்பட்டி, குருமலை ஆகிய இடங்களில் புலையர்களும், மேல்குரு மலை, பூச்சிக்கொட்டாம்பாறை, கருமுட்டி ஆகிய இடங்களில் முதுவர்களும் வசித்து வருகின்றனர். திருமூர்த்திமலைக்கோயில் வரை தான் சாலைவசதி உள்ளது. அதற்கு பிறகுமக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு கரடுமுர டான பாதையில் நடந்து தான் செல்ல வேண்டும்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர்போராட்டம் காரணமாகவும், வனஉரிமைச் சட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு கிராம சபை தீர்மானம் போட்டால் வனநிலத்தை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதைப் பயன்படுத்தி எல்லா மட்டத்திலும் சாலை போட நிலம் ஒதுக்குவது தொடர்பான பணிகள் நிறைவடைந்துவிட்டது.
மாவட்ட வனஉரிமைக்கமிட்டி கூடி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு பிறகுதான் சாலை அமைப்பது தொடர்பான அடுத்தக்கட்டப்பணிகளை துவக்க முடியும். மாவட்ட வனஉரிமை கமிட்டிக்கென்று மாவட்ட ஆட்சியர்ஒரு சில மணி நேரம் ஒதுக்கினால் 500 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத ஆயிரக்கண க்கான மக்களுக்கு சாலை வசதி கிடைக்கும்.இப்படி மாநிலம் முழுவதும், வனஉரிமைக் கமிட்டிகளை கூட்டாததால் ஏராளமான பணிகள்முடங்கியுள்ளன. கொரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி ஆதிவாசி மக்களுடைய உரிமைகளை வழங்குவதில் காலங்கடத்துவதை ஏற்க முடியாது. ஆகவே, திருப்பூர் மாவட்டஆட்சியர் மட்டுமல்ல, அனைத்து மாவட்டஆட்சியளர்களுமே ஒரு நாள் ஒதுக்கி வனஉரிமைச்சட்டம் தொடர்பாக நிலுவையிலுள்ள பணிகளுக்கு ஒப்புதல் வழங்கினால் பல ஆயி ரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். இதை செய்ய வேண்டியது உங்கள் கடமைதான் என்றாலும் ஆதிவாசி மக்கள் மீது கருணை கொண்டாவது இதற்கென்று நேரத்தை ஒதுக்குங்கள் என்பது தான் நமது வேண்டுகோள். எனவே,அனைத்து மட்ட வனஉரிமைக் கமிட்டிக்கூட்டங்களையும் உடனடியாக நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வனஉரிமை சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் இறுதியாகும் வரை வனத்துறையினர் மலைவாழ் மக்களை துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் பொருப்பாகும். மீறினால் மலைவாழ் மக்கள் தங்கள் வாழும் உரிமையை பாதுகாத்துக் கொள்ள மோதல் தவிர்க்க முடியாதது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிவைப்போம்!
===பெ.சண்முகம்===