tamilnadu

img

குழந்தைகள் கவனம்.... அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா எச்சரிக்கை அவசியம்....

சென்னை:
கடந்த பத்து நாட்களில் 0 முதல் 12 வயது வரையிலான 2,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு ஏப்ரல் 14-ஆம்தேதி ஏப்ரல் 15-ஆம் தேதி (24 மணி நேரத்தில்) 256 குழந்தைகளுக்கு தொற்றிருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது ஏப்,16-ஆம் தேதி 310 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல்17-ஆம் தேதி 319 குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளனர். 17-ஆம் தேதி மாலை நிலவரப்படிதமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வர்களின் மொத்த எண்ணிக்கை 9,80,728. இவர்களில் 0 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மட்டும் 35,537. மொத்த பாதிப்பில் 3.6 சதவீதத்தினர் குழந்தைகள் என்பதுஅதிர்ச்சியளிப்பதாய் உள்ளது.

இதுதொடர்பாக குழந்தைகள் சுகாதார நிறுவனத்தின் (ஐ.சி.எச்) இயக்குநர் எழிலரசி கூறுகையில், “குழந்தைகளுக்கென தனியாக நோய் தடுப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம். தற்போது தொற்று உறுதிசெய்யப்பட்ட 11 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம்”  என்றார்.ஐ.சி.எச்-க்கு வந்த குழந்தைகளுக்கு லேசான பாதிப்பு உள்ளது. அல்லது அறிகுறியற்றவர்களாக உள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் என சிகிச்சைக்கு யாரும் வரவில்லை. லுகேமியாசிகிச்சைக்கு முன்னர் அல்லது அறுவைச்சிகிச்சை செய்வதற்கு முன்பு பரிசோதிக்கப் பட்ட குழந்தைகளில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்கிறார் குழந்தைகள் சிகிச்சை நல மையத்தின் மாநில நோடல் அதிகாரி எஸ்.சீனிவாசன்.அவர் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு வீட்டிலும் கொரோனா கட்டுப்படுத்தலுக்கான விதிகள் பின்பற்றப்படவில்லை. இதனால்குடும்பம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. வீட்டிலுள்ள குழந்தைகளைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் வீட்டில்சுயக்கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வது அவசியம்” என்றார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலில்பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக சுவாசப் பிரச்சனைகளால் குழந்தைகள் பாதிக்கப்படாமலிருந்தன. பரவல் உச்சத்தை அடைந்த நிலையில், அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தோம் என்கிறார்  வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவம் மற்றும்பராமரிப்புத் துறை பேராசிரியர் எபோர் ஜேக்கப். மேலும் அவர் கூறுகையில், “தில்லி, மும்பையைச் சேர்ந்த மருத்துவர்கள் காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். ஆனால், இங்கு சுவாசப் பிரச்சனை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் இதுவரை மருத்துவமனைக்கு வரவில்லை” என்றார்.

‘‘கடந்த ஆண்டு, கொரோனா பரவலின் போது ஊரடங்கு அமலில் இருந்ததால் குழந்தைகள் வீட்டிலேயே இருந்தனர். ஆனால் இப்போது, ​​அவர்கள் சுதந்திரமாக வெளியே விளையாடுகிறார்கள். குழந்தைகள் முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். அவர்களுக்கு காய்ச்சல், சுவாசப் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது. வயதில் மூத்தவர்கள் நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் இரண்டு வயதிற்குக் குறைவான குழந்தைகளை பராமரிப்பதை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார் காஞ்சி காமகோடி மருத்துவமனை அதிகாரி ஜனனி சங்கர்.
 

;