விடிய கொட்டித்தீர்த்த மழை
கடலூர், செப்.19 - கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப்.19) சிதம்பரம், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சில பகுதிகளில் கனமழையும் பெய்த நிலையில், கடலூர் நகரம் முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. கடலூர் சிப்காட், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.இதனால், தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக வான மாதேவியில் 131 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 743.20 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி, செப்.19- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்து சுய உதவிக் குழுவில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும். தகுதிகள் உடைய நபர்கள் தங்களது விண்ணப்பங்களை 21.9.2025 ஆம் தேதிக்குள் வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், நிறைமதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம் -606-213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
கடலூர், செப்.19 - கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கடலூர்- புதுச்சேரி சாலை ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை நடத்தினர். மருத்துவர் ஸ்டிக்கர் ஒட்டி வந்த இந்த காரை சோதனை செய்த போது காரின் முன்பக்க இருக்கைக்கு கீழ் தகரத்தில் அறை போல் அமைத்து, அதில் நூதன முறையில் புதுவை மாநில உயர் ரக 120 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்த போது, அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அவரை காவல்துறையினர் துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் புவனகிரி அருகே தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (43) என்று தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 120 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்