tamilnadu

img

மானாமதுரையில் ரயில்வே கேட் மூடுவதற்கு எதிர்ப்பு அனைத்துக் கட்சியினர், பெண்கள் முற்றுகை போராட்டம்!

மானாமதுரையில் ரயில்வே கேட் மூடுவதற்கு எதிர்ப்பு அனைத்துக் கட்சியினர்,  பெண்கள் முற்றுகை போராட்டம்!

மானாமதுரை, அக்.4- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் சாலை அருகே உள்ள ரயில்வே கேட்டை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினரும், பெண்களும் இணைந்து சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே கேட்டை மூட முயற்சி செய்தபோது, அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த மதுசூதன் ரெட்டி ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, மாற்று சுரங்கப்பாதை அமைக்காமல் கேட்டை மூடக்கூடாது என்று உறுதி பெற்றதால், அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக கேட்டை மூடுவதாக  அறிவித்திருந்தாலும், நிரந்தரமாக மூடப்படும் என்ற தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து கட்சியினரும், பெண்களும் இணைந்து ரயில்வே பாதையில் மறியல் போராட்டம் நடத்தினர். பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை மக்கள் மூடியதால், ரயில்வே காவல்துறையினருடன் வாக்குவாதமும் ஏற்பட்டது. அந்த நேரத்தில் வந்த மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, “ஒரு வாரத்திற்குள் ரயில்வே கேட் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும்; திங்களன்று அதிகாரிகளுடன் ஆலோசித்து நிரந்தர தீர்வு காணப்படும்” என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். வர்த்தக சங்கத் தலைவர் பாலகுருசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் முனியராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி, நகர் தலைவர் புருஷோத்தமன், நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், பாஜக உறுப்பினர் நாமக்கோடி, தேமுதிக ஒன்றியச் செயலாளர் தர்மராமு, தவெக நகர் செயலாளர் நம்பிராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகப்பிரியா, காளீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.