tamilnadu

img

கொரோனா நிவாரணக்களத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

சென்னை,ஏப். 2- கொரோனா ஊரடங்கால் பாதிக்க ப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்குகிற பணிகளை இந்தியாவின் பல பகுதிகளில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் துவங்கியுள்ளது. மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு நன்கொடை, எல்.ஐ.சி.யில் பணியாற்றும் தூய்மை, பாதுகாப்பு, தற்காலிக பணியாளர்களுக்கு நிவாரணம், சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா உழைப்பாளிகளுக்கு உணவு, உதவிகள் என மும்முனை பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

நேரடி நிவாரணம்
பெங்களூரில் சிஐடியுவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பலசரக்கு அடங்கிய மூடைகளை வழங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமூக சமையல் ஏற்பாடு செய்து ஏழை எளிய தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் 400-க்கும் மேற்பட்ட ஏழை எளியோர், அமைப்பு சாரா தொழிலாளர், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வருகை தருவோரு க்கு சிஐடியு ஏற்பாடு செய்து தரும் உணவு வழங்கல் நிவாரணத்தில் கோவை எல்.ஐ.சி மகளிர் துணைக் குழு ரூ. 20 ஆயிரத்தை அளித்து இணைந்து ள்ளது. புதுச்சேரியில் வேலையிழந்து நிற்கும் கட்டுமானத் தொழிலாளர் குடியிருப்பில் உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை குரோம் பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பலசரக்கு மூடைகள் வழங்குகின்ற பணிகளை சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் துவங்கியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம்
தமிழகம் முழுமையும் உள்ள எல்.ஐ.சி அலுவலகங்களில் பணியாற்றும் தூய்மை, பாதுகாப்பு பணியாளர்களுக்கு ரொக்க நிவாரணம் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி கோட்டத்தில் ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்து500, சென்னை கோட்டம் 2- இல் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரம், மதுரை கோட்டத்தில்  ரூ.1 லட்சத்து 06 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதேபோன்ற முயற்சிகள் நடந்தேறி வருகின்றன.

மாநில முதல்வர் நிவாரண நிதி
இந்தியா முழுமையுமுள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை அளித்து வருகிறார்கள். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு ஒரு நாள் ஊதியத்தை குறைந்தபட்சமாக வழங்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்துள்ளது. கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பல ஊழியர்கள் ஒரு மாத ஊதியம், ஐந்து இலக்க நன்கொடைகளை அளித்துள்ளார்கள். கோயம்புத்தூர் கோட்ட எல்.ஐ.சி ஊழியர்கள் நேற்று வரை அனுப்பியுள்ள தொகை ரூ. 13 லட்சங்களை கடந்துள்ளது. சேலம், சென்னை -1, மதுரை, சென்னை -2, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்தும் நன்கொடைகளை இன்சூரன்ஸ் ஊழியர்கள் அனுப்பி வருகிறார்கள். இத்தகையப் பணிகளுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீ காந்த் மிஸ்ரா பாராட்டு தெரிவித்துள்ளதோடு இது நீண்ட நெடிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்றும் கூறியுள்ளார்.

;