சென்னை:
சமூகநலத்துறை மானிய கோரிக்கையில் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் பொதுச் செயலாளர் அ.நூர் ஜஹான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாளைய வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இத்திட்டத்தில் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற சத்துணவு ஊழியர்களுக்கு தற்போது சிறப்பு ஓய்வூதியமாக வழங்கும் 2 ஆயிரம் ரூபாயில் வாழ்க்கை நடத்த முடியாது. கேள்விக்குறியாக இருக்கின்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்பபாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.9 ஆயிரமும், ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3லட்சமும் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ளபணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக புதிய நியமனங்கள் மூலம் நிரப்ப வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஆனால் பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லாதது சத்துணவு ஊழியர் மத்தியில் பெரும் ஏமாற்றமே.மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.சமூக நலத்துறை மானிய கோரிக்கை தினத்தில்அறிவிப்பு வெளிவரும் என காத்திருந்த சத்துணவு ஊழியர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே. சத்துணவு ஊழியர்கள் எதிர்பார்த்து ஏமாந்தநிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு தமிழக முதல்வர் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.