tamilnadu

img

பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திடுக வேட்டைக்காரன் இன மக்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், மே 4- வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் (எஸ். டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியினர் மக்கள் முன்னேற்றம் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்டைக்காரன் இன மக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.வேட்டைக்காரன் இன மக்களுக்கு முறையான சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடு பெற முடியாமல் உள்ளனர். தொகுப்பு வீடுகள் போன்ற அரசின் சலுகைளும் பெறமுடியாமல் உள்ளனர். இதனால் தங்களை பழங்குடியினர் (எஸ். டி) பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக இம்மக்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில் வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும், தங்களை பழங்குடியினர் பட்டியலில் (எஸ். டி) சேர்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னையில் உள்ள பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

 இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம், மலைவாழ்மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, பொதுச் செயலாளர் இரா.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தின் போது பழங்குடியினர் நலத்துறை இயக்குநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அவர் ‘உதகையில் உள்ளபழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கு வேட்டைக்காரன் சம்மந்தமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து உரிய அறிக்கையை பெற்ற பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து உதகையில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் சுப்பிரமணியத்தை சந்தித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர்பி.டில்லிபாபு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியினர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, தலைவர் எம்.சேட்டு, மாநில துணைச் செயலாளர் சின்னையா, ஜி.ராஜா (திருவள்ளூர்), வரதராஜன், வீராசாமி (வேலூர்) உட்பட 20-கும் மேற்பட்ட தலைவர்கள் வெள்ளியன்று ( மே 3) கோரிக்கை மனு அளித்தனர்.கள ஆய்வு செய்து விரைவில் வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

;