கடலூர், ஆக. 7- வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட வீடுகள் முறையாக பயனாளிகளுக்கு வழங்கப் படவில்லை. வீடே கட்டாதவர் பெயரில் வீடு கட்டியதாக முறைகேடாக பணம் பெறப் பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மானியத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகளுக்கு மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்து கழிப்பறை கட்டிய தாக பணம் பெறப்பட்டுள் ளது. இவை யனைத்தும் தகவலறியும் உரி மைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. உதார ணமாக கீரப்பாளையத்தைச் சேர்ந்த ஆ. சிவக்குமார் என்பவர் இப்போதும் கூரை வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், அவர் அரசின் ஒதுக்கீட்டில் வீடு பெற்றுள்ளதாகவும் ரூ.1.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அ.காமாட்சிவேலு என்பவருக்கு பணம் வழங்காமலேயே ரூ.1.20 லட்சம் வழங்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நூற்றுக்கணக்கானோர் பெயரில் வீடுகள் கட்டியதாக ஆவணங்களை உருவாக்கி பணத்தைப் பெற்று பல லட்ச ரூபாய் அதிகாரி கள் ஊழல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு திட்டங்களிலும் முறைகேடுகள் அந்த ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.