பூங்கா, மைதானங்கள் தனியார்மயத்தை கைவிடுக!
வாலிபர் சங்க தென்சென்னை மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஆக. 10 - பூங்காக்களையும், இறகு பந்து, ஸ்கேட்டிங், கால்பந்து மைதானங்களையும் தனியாருக்கு கொடுத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் 19வது மாவட்ட மாநாடு ஞாயிறன்று (ஆக.10) தரமணியில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், போதை பொருள் புழக்கத்தை தடுக்க, அதை கடத்தி வருகிறவர்களின் சொத்துக் களை பறிமுதல் செய்ய வேண்டும், பெண்க ளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சமூக உளவியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கேற்ப பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும், கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், கல்வியாளர்களை கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும், தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருகம்பாக்கம் பகுதியில் இருந்து வெண்கொடியும், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகள் நினைவுச் சுடரையும் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். மாநாட்டிற்கு தலைமை தாங்கி, சங்க கொடியை மாவட்டத் தலைவர் எஸ்.சுரேஷ் ஏற்றினார். வர வேற்புக் குழுத் தலைவர் இரா.புரு ஷோத்தமன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் அ.ஜானகிதேவி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் தீ.சந்துருவும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சே.திவாகரும் சமர்ப்பித்தனர். சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ், தீ.விஜயகுமாரி (மாதர் சங்கம்), ஸ்வேதா (மாணவர் சங்கம்), கு.அழகுநம்பி வெல்கின் (யுனைட்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் நிறைவுரையாற்றினார். வரவேற்புக் குழுச் செயலாளர் என்.குமரன் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு 25 பேர் கொண்ட மாவட்டக் குழுவின் தலைவராக என்.குமரன், செயலாளராக தீ.சந்துரு, பொருளாளராக ம.சிந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.