tamilnadu

img

தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு 

மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றுக்கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18), ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், தீனதயாளன் மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் விஸ்வா மறைவுக்கு மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், இளம் வயதில் கனவுகளைச் சுமந்துகொண்டிருந்த தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

இதனிடையே, விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. சாதனை புரிந்து வந்த விஸ்வா விரைவில் நம்மை விட்டுப் பிரிந்தது வேதனையளிக்கிறது. கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரியில், தேசிய தரவரிசை போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பட்டத்தை வென்றவர் தீனதயாளன் என்பது குறிப்பிடத்தக்கது. 

;