பிஓபி அல்லது இரசாயன வண்ணங்கள் கொண்ட பிள்ளையார் சிலைகளை செய்வோர் மீது சூழலியல் குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடனடியாக சிறையில் அடைக்கவேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று சென்னையில் கடலில் கொட்டப்பட்ட பல பிள்ளையார் சிலைகள் பிஓபி கொண்டு செய்யப்பட்டதாகவும், பல இரசாயன வண்ணங்கள் பூசப்பட்டவை என்கின்றன தரவுகளும் புகைப்படங்களும். இது அப்பட்டமான தவறு, நீதிமன்ற அவமதிப்பு. சூழலை காக்க எந்த அக்கறையும் மதங்கள் காட்டாது என்பது நிரூபணமாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு மிகமுக்கியமான கோரிக்கை:-
அடுத்த ஆண்டு முதல் பிஓபி வைத்து உற்பத்தியாகும் பிள்ளையார் சிலைகள் தடைசெய்யப்பட வேண்டும். பிஓபி அல்லது இரசாயன வண்ணங்கள் கொண்ட பிள்ளையார்களை செய்வோர் மீது சூழலியல் குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடனடியாக சிறையில் அடைக்கவேண்டும். அவர்கள் தொடர்ந்து செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும், அதுமட்டுமில்லாமல், இயந்திரங்களை கொண்டு சிலைகளை கடலில் கொட்டுவதும் தடை செய்யப்பட்டு அதற்கான எந்த உதவியையும் அரசு செய்யக் கூடாது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.