தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் கூடுதலாக 875 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும். இந்த இடங்களானது 3 புதிய தனியார் கல்லூரிகள் உட்பட, 6 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து கிடைக்கிறது. இதனால், 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 650 இடங்களாக இருக்கும். மொத்தமாக தமிழகத்தில் 52 மருத்துவக் கல்லூரிகளில் 8 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்களாக இருக்கும்.
தேசிய மருத்துவ ஆணையம் பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள பாரத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, இந்த ஆண்டு முதல் 150 மருத்துவ மாணவர்களை அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் திருவள்ளூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு 150 இடங்களில் சேர்க்க அனுமதி வழங்கியது. இதேபோல் கூடுதலாக 150 இடங்களை அனுமதிக்க தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே. 150 மாணவர்களை அனுமதிக்க பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்திருந்தது.
இதேபோல், அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் மேலும் 50 இடங்களும், கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி கல்லூரியில் மேலும் 25 இடங்களும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தில் கூடுதலாக 100 இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (சவீதா பல்கலைக்கழகம்) மற்றும் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (மீனாட்சி பல்கலைக்கழகம்) ஆகியவையும் 100 இடங்களை அதிகரிக்க அனுமதி பெற்றுள்ளன. பிஎஸ்ஜி, சவிதா, மீனாட்சி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் இனி 250 இடங்கள் இருக்கும்.
இதேபோல் சேலத்தில் உள்ள விநாயக மிஷன்ஷ் கிருபானந்தா வாரியர் மருத்துவக் கல்லூரியில் (விநாயகா மிஷன் டீம் பல்கலைக்கழகம்) கூடுதலாக 50 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.