tamilnadu

கோயம்பேட்டில் சுகாதாரமற்ற 500 குடிநீர் கேன்கள் பறிமுதல்

போரூர், மே 15- சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் குடிநீர் கேன்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துசென்னைக்கு கேன்களின் மூலம் அடைக்கப்பட்ட குடிநீர் அதிக அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இதில் காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற கேன்களில் குடிநீர் வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து சென்னைமாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சென்னைமுழுவதும் சோதனை நடத்தி தரமற்ற குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், புதனன்று(மே 15) கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ராமராஜ், சதாசிவம் ஆகியோர் தலைமையில் தண்ணீர் கேன்கள் ஏற்றி வந்த ஆட்டோ, வேன் உள்ளிட்ட 11 வாகனங்களை மடக்கி சோதனை நடத்தினர்.அப்போது அதில் இருந்த 500-க்கும் மேற்பட்ட கேன்களில் தயாரிப்பு தேதி குறிப்பிடாமலும் உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தரச்சான்று காலாவதியாகி புதுப்பிக்கப் படாமலும் சுத்தமற்ற கேன்களில் குடிநீர் கொண்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

;