tamilnadu

30 ஆண்டுகளாக இருந்த பொதுப்பாதை அடைப்பு

ன்னை, மே 3- மணலி மண்டலம் 15ஆவது வார்டுக்கு உட்பட்ட மணலி புதுநகர் அருகே ஈச்சங்குழி என்ற பகுதி உள்ளது.  இங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் போக்குவரத்திற்காக ஒரு பாதையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், இந்த பாதை கோயிலுக்குச் சொந்தமான இடம், இதனை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அந்த பாதை யாருக்குச் சொந்தமான இடம் என்பதை அடையாளம் கண்டு சான்றிதழ் அளிக்க வேண்டும் என மாநகராட்சி உதவி பொறியாளர் சோமசுந்தரம், சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் தாசில்தாருக்கு கடிதம் அனுப்பினார்.

ஆனால் பல நாட்களாகியும் அந்த பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த பிரச்னை முடிவுக்கு வராமல் நீடித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் முள்வேலி அமைத்து பாதை மறிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் வழங்கல் வாரிய பொது குழாயையும் அடைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம், மணலி புது நகர் காவல்துறையினர், குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் பிரச்னைக்குரிய ஈச்சங்குழி பகுதிக்குச் சென்றனர்.

பல ஆண்டுகளாக பயன்படுத்தி பாதையையும், அரசாங்கத்தால் போடப்பட்ட குழாயையும் திடீரென்று அடைக்கக் கூடாது எனக் கூறி அந்த முள்வேலியை அப்புறப்படுத்தியதோடு, குடிநீர் குழாயையும் திறந்து விட்டனர். ஆனாலும் இதற்கு எதிர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மாவட்ட வருவாய்த் துறை தலையிட்டு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.