tamilnadu

கொத்தடிமைகள் 28 பேர் மீட்பு

ஒரகடம்,ஏப்.28-வல்லக்கோட்டையில் மரம் வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 12 பெண்கள் உள்பட 28 பேரை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் மீட்டனர். வல்லக்கோட்டை டி.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் (45). அவர் ஒரகடம், திருப்பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்களை வெட்டுவதற்காக வாலாஜாபாத் வட்டம், படூர், உத்திரமேரூர் வட்டம் நெமிலி, ஆர்சூர், மலையம்பாக்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த 28 பேரைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தார். இவர்களைக் கொண்டு மரம் வெட்டும் தொழிலை நடத்தி வந்தார்.7 பேருக்கும் தலா ரூ.4ஆயிரத்தை முன்பணமாகக் கொடுத்துவிட்டு, வாரக் கூலியாக ரூ.150 அளித்து கொத்தடிமையாக வைத்திருந்தார். இதில் ராஜேந்திரன் என்பவர் இவரிடமிருந்து தப்பி தனியார் தொண்டு நிறுவனத்திடம் தஞ்சம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் படி காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணனுக்கு அறிவுறுத்தலின் பேரில் திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் காஞ்சனமாலா மற்றும் வருவாய் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது 28 பேர் கொத்தடிமைகளான இருந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறை உதவியுடன் அதிகாரிகள் மீட்டனர். காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று, நிவாரணத் தொகை வழங்குவதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனிடையே 28 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த முருகன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

;