tamilnadu

img

இந்நாள் ஜன. 24 இதற்கு முன்னால்

1857 - ‘கல்கத்தா பல்கலைக்கழகச் சட்டம்’ இங்கிலாந்து அரசால் நிறைவேற்றப்பட்டு, தெற்காசியாவின் முதல் முழுமையான பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது. மேற்கத்திய பாணியில் பல்துறைகளையும் கொண்ட, இந்தியாவின் மிகப்பழைய நவீன பல்கலைக்கழகமான இதன் முதல் துணைவேந்தராக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வில்லியம் கால்வில் செயல்பட்டார். இதன் புகழ்பெற்ற செனட் அரங்கம் (அன்றைய மதிப்பில்) ரூ.2,52,221 செலவில் 1873இல் கட்டிமுடிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் என்பது, ‘உயர்கல்வி வழங்கி, பட்டமளிக்கும் அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனம்’ என்று தற்காலத்தில் வரையறுக்கப்படுகிறது. லத்தீனில், ஆசிரியர்கள், அறிஞர்களின் குழு என்ற பொருள்தரும், ‘யுனிவர்சிட்டாஸ் மாஜிஸ்ட்ரோரம் எட் ஸ்காலரியம்’ என்பதிலிருந்து யுனிவர்சிட்டி என்ற பெயர் உருவானது. கிரேக்க வரலாற்றின் நாயகர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படும் அகாடமோஸ் புதைக்கப்பட்ட இடத்திலிருந்த தோப்பில் பிளேட்டோ கருத்துரைகளை வழங்கியதால் அது பிளேட்டோவின் அகாடமி என்ற பெயர் பெற்று, கல்வி நிலையங்களையும் அகாடமி என்று அழைப்பது தொடங்கியது. உலகின் மிகப்பழைய பல்கலைக்கழகங்கள் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்திருக்கின்றன. 859இல் மொராக்கோவில் தொடங்கப்பட்ட அல் குராவுயின் பல்கலைக்கழகமே பட்டம் வழங்கிய முதல் பல்கலைக்கழகமாகக் குறிப்பிடப்படுகிறது.

11-15 நூற்றாண்டுகளில் இத்தாலி(அப்போது புனித ரோமப் பேரரசு) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்டவை இடைக்காலப் பல்கலைக்கழகங்கள் என்றழைக்கப்படுகின்றன. 15-18 நூற்றாண்டுகளில் ஆய்வுகள், உற்பத்தி போன்றவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஐரோப்பாவில் ஏராளமான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இவை, தொடக்ககால நவீன பல்கலைக்கழகங்கள் என்றழைக்கப்படுகின்றன. இக்காலத்திய பல்கலைக்கழகங்கள், மத்தியதரைக்கடல் நாடுகளில் ஸ்டேடியம் ஜெனரேல் என்றும், வட-ஐரோப்பிய நாடுகளில் அகாடமி என்றும் அழைக்கப்பட்டன. அதுவரை கல்வித்திட்டங்களில் மதம் செலுத்திக்கொண்டிருந்த ஆதிக்கம் 1800களில் குறைந்தது. ஜெர்மானிய, பிரெஞ்சுப் பல்கலைக்கழகங்கள், தங்களுக்கென்று ஆய்வு இதழ்களை வெளியிடத்தொடங்கின. சுதந்திரம், ஆய்வகங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட ஃப்ரடரிக் ஷ்லயர்மாச்சர் என்பவரின் கருத்துகளின் அடிப்படையில், வில்லெம் வோன் ஹம்போல்ட் உருவாக்கிய ஜெர்மானிய பல்கலைக்கழக வடிவமே உலகெங்கும் ஏற்கப்பட்டது. அரசுகளால் உருவாக்கப்படும் தேசியப் பல்கலைக்கழகங்கள் என்பதைக் கடந்து, ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து அரசுகளுக்கிடையேயான பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வு, கல்வியின்மூலம் உலகளாவிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் என்பது ஐநாவால் 1972இல் டோக்கியோவில் தொடங்கப்பட்டது.

- அறிவுக்கடல்

;