tamilnadu

img

கேடிசி நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் கேடிசி தனியார் நிறுவனத்தை கண்டித்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை மையமாகக்கொண்டு நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கேரளா டிரான்ஸ்போர்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. கோவை திருச்சி சாலையில் உள்ள சுங்கம் பகுதியில் இதன் கிளை செயல்பட்டு வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட ஓட்டுனர், மெக்கானிக், சுமைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக முறையாக ஊதியம் தரப்படாமல் கேடிசி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படாததால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் முறையிட்டும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் இத்தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இரண்டாவது நாளான புதன்கிழமை கேடிசி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும்விதமாக கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாலைப்போக்குவரத்து சம்மேளன செயலாளர் எஸ்.மூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் ரபீக், தலைவர் வேணுகோபால், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர், நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ், கேரளா கிளப் செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதுகுறித்து போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சிஐடியு கேடிசி கிளை செயலாளர் மணிகண்டன் கூறுகையில், இந்நிறுவனத்தில் முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறோம். எங்களின் முழு உழைப்பும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே அர்ப்பணித்துள்ளோம். இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக கேடிசி நிர்வாகம் திட்டமிட்டே ஊழியர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பயன்களை இழுத்தடித்து வருகிறது. இந்நிறுவனத்தை நம்பி பயனில்லை என பலர் பணியில் இருந்து விடுவித்துக்கொண்டனர். இவர்களுக்கான பணிக்கொடையும் இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக கேடிசி நிர்வாகம் எங்களின் வாழ்நிலை அறிந்து ஊதியம் உள்ளிட்ட பணப்பயன்களை வழங்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார். 

;