தனியார்மயத்திற்கு எதிராக துறைமுகங்களிலும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம்
அ.சவுந்தரராசன் எச்சரிக்கை
சென்னை, ஆக. 25 - தனியார்மயத்திற்கு எதிராக துறை முகங்களிலும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் என்று கூறினார். மெட்ராஸ் போர்ட் & டாக் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) சிறப்பு பேரவை திங்களன்று (ஆக.25) ராயபுரத்தில் நடை பெற்றது. போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும், துறைமுக தொழிலாளர்களை பழி வாங்கும் வகையில் துறைமுக ஆணைய திருத்தச்சட்டதை கைவிட வேண்டும், வரும் காலங்களில் சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டாலும் ஓய்வூதியம் உயர்வு இல்லை என்கிற சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவரும், சங்கத்தின் தலைவருமான அ.சவுந்தரராசன் பேசியதாவது: ஒப்பந்தமுறை, ஆட்குறைப்பு, புதிய வேலை நியமனம் இல்லாமை ஆகியவற்றை எதிர்த்தும், ஓய்வு பெற்றோருக்காகவும் சிஐடியு போராடுகிறது. சிஐடியு போராடி பொது உணர்வை உருவாக்கி, கோரிக்கை நிறைவேறும் தருவாயில்தான், பிறச் சங்கங்கள் கட்டாயத்தின் பேரில் அந்த கோரிக்கைக்காக பேசும் நிலை ஏற்படு கிறது. சட்டப்பாதுகாப்பு இருப்பதால், கூலியை குறைக்கமுடியவில்லை. நினைத்தபோது வேலையை விட்டு துரத்த முடியவில்லை. எனவே, காலி பணியிடங்களை நிரந்தர முறையில் நிரப்பக்கூடாது என்பது அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், முதலாளிகள் தந்திரமாக செயல்படுகின்றனர். வள்ளுரில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஒரு நிரந்தர தொழிலாளி கூட இல்லை. அனைவரும் ஒப்பந்த தொழிலாளியாக வைத்துள்ளனர். பணி நிரந்தரம் இல்லையென்பதால் சங்கம் வைத்து உரிமை கோர முடியாது. எந்த ஒரு சட்டமும் தொழிலாளிக்கு பொருந்தாது என்ற நிலையை உருவாக்கு கின்றனர். டிசிஎஸ் நிறுவனம் 12 ஆயிரம் பேரை வெளியேற்ற உள்ளனர். தொழி லாளர்களை 200 ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். ஓய்வூதியமே இருக்க கூடாது என்பது அரசின் நோக்கமாக உள்ளது. சேலம் ஸ்டீல் தொழிற்சாலையை தனியார்மயமாக்க கூடாது என்று போராடியதால், விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். இது போன்று துறைமுகத்திலும் வழுவான இயக்கங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேரவைக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் வி.தமிழ்செல்வன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை செயலாளர் ஆர்.ராஜேந்திரன் வாசித்தார். நீர் வழி போக்குவரத்து சம்மேளன அகில இந்திய பொதுச் செயலாளர் டி.நரேந்திர ராவ், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சங்கத்தின் துணைத் தலைவர்கள் எஸ்.சங்கரலிங்கம், எஸ்.ஆனந்தி, செயலாளர்கள் எஸ்.செந்தில்குமார், எஸ்.ஆனந்த் ஆகியோர் பேசினர். செயலாளர் கே.செல்வம் நன்றி கூறினார்.