tamilnadu

img

“நாட்டை காப்பாற்ற பாஜகவை விரட்ட வேண்டும்” - தொல். திருமாவளவன்

மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி அதிகாரத்தை பிடிக்கும் பாஜகவை விரட்டி நாட்டை காக்க வேண்டும் என கோவையில் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

அப்போது பேசிய அவர் அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதை வைத்து தென் இந்தியாவிலும் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். ஏற்கனவே ஆண்ட மாநிலங்களில் மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த தேர்தலை விட சரிவையே கண்டுள்ளது பாஜக. உ.பி. யில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சரிவை சந்தித்துள்ளனர்.  

காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளோடு ஒருங்கிணையவில்லை. மத உணர்வுகளை பாஜக அரசியலுக்காக பயன்படுத்துகிறது. இது மிகவும் அச்சுறுத்தலான செயல். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றி பாஜக பேசவில்லை.  அதற்கு மாறாக ஜெய்ஸ்ரீராம் என்றும் இஸ்லாமிய எதிர்ப்பு மூலம் மக்களை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.  

மத சார்பற்ற கட்சிகள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும். இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மற்ற கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது. நாட்டை காப்பாற்ற  வேண்டுமென்றால், பாஜகவை விரட்ட வேண்டும். அதற்கு ஈகோவை பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்ட காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட அனைத்து அரசியல் அமைப்புகள் ஒன்றுசேர வேண்டும்.  

மத சார்பற்ற முற்போக்கு கூட்டமைப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். 

மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாஜக ஆணவ கொலைகளுக்கு துணை நிற்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றார். 

;