tamilnadu

img

நான்கு மாதங்களுக்கு 30 சத ஊதிய பறிப்பு – ஊரடங்கை காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தை பறிக்கும் பிரிக்கால் நிறுவனம்

கோவை, ஏப்.17 - 
ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை பிடிக்கவோ, லே- ஆப் விடவோ கூடாது என ஒவ்வொருமுறையும் தொலைக்காட்சியில் தோன்றி பிரதமர் உரையாற்றுகிறார். ஆனால் , இதனை கார்ப்ரேட் நிறுவனங்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இதிலும் கோவை பிரிக்கால் நிறுவனம் சர்வதிகரமாக ஊழியர்களின் நான்கு மாத ஊதியத்தில் 30 சதவீதம் பிடிக்கவும், இதர சட்ட சலுகைகளை பறிக்கவும் முடிவெடுத்துள்ளது தொழிலாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை தலைமையிடமாக கொண்டு  பிரிக்கால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஆறு இடங்களில் பிளாண்ட்டுகளும், இதுபோக பிரேசில், இந்தோனிசியா நாடுகளிலும் இதன் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்களும், மொத்தமாக சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் என இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இங்கு வாகனங்களுக்கு பொருத்தக்கூடிய மீட்டர், ராணுவத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள்  உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனம் ஓவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் லாபம் ஈட்டி வந்த போதும் , அதற்கு காரணமான தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளோ, ஊதியத்தையே  உயர்த்தி வழங்காத நிலை இருந்து வருவதாக தொழிலாளர்கள்  தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் தற்போதைய  ஊரடங்கு கால சுமையை மட்டும் தொழிலாளர்களே முழுமையாக சுமக்க வேண்டும் என்கிற பிரிக்கால் நிறுவனத்தின் போக்கு தொழிலாளர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்த பிரிக்கால் நிறுவனத்தின் சுற்றறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில் பிஎஸ் 5 தரத்திற்கு வாகன உற்பத்தித் துறை  மாற வேண்டிய நிர்பந்தத்தால் வாகன உற்பத்தியை சார்ந்துள்ள நமது நிறுவனமும், வாகன உற்பத்தியாளர் நிறுவனங்களும் கடந்த 18 மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், தொழிற்சாலைகளின் நிலையான செலவினங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், கோவிட் 19 வைரஸ் தொற்றால் உலகளாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், கடந்த ஜனவரி 2020 துவக்கத்திலிருந்தே உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜனவரி 2020 முதல் மார்ச் 2020 வரை சுமார் 80 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி மற்றும் விற்பனையை இழந்துள்ளது. இன்றைய சூழலில், நிறுவனம் மீண்டும் இயங்கத் துவங்கும் போது நமது நிறுவனத்திற்கான ஆர்டர்களும் வெகுவாகக் குறையும்.  நமது நிறுவனத்திலும், நீண்டநாட்கள் உற்பத்தியும், வருவாயும் இல்லாத நிலை நீடித்து வருவதால், கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிக்கடன் தவணைத் தொகையை மூன்று மாதகாலத்திற்குப் பிறகு செலுத்த அரசாங்கம் சலுகை அளித்திருந்தாலும், தள்ளிவைக்கப்படும் இந்த மூன்று மாதகாலத்திற்கான தொகைக்கு கூடுதல் வட்டியும் செலுத்த வேண்டியுள்ளது. ஜனவரி 2020 மற்றும் பிப்ரவரி 2020 மாதத்தில் நமது விற்பனையின் மூலம் பெறப்பட்ட தொகைகளைக் கொண்டு நமது தற்போதைய செலவினங்களை ஓரளவிற்கு ஈடுசெய்ய இயலும் என்றாலும், வரும் மாதங்களில் இந்த செலவினங்களை எதிர்கொள்ளத் தேவையான பணப்புழக்கம் இல்லாத சூழ்நிலையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 தற்போதைய நிதி நிலையைக் கொண்டு நமது நிறுவனத்தை சார்ந்துள்ள வெண்டார்கள், ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமக்குள்ள நிதியை பகிர்ந்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நிறுவனத்தில் உற்பத்தியும், வருமானமும் இல்லாத நிலையால் ஏற்பட்டுள்ள இழப்பை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும். தவறினால், ஒட்டுமொத்த இழப்பை நிறுவனம் சமாளிக்க இயலாமல், நிறுவனத்தின் செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்தக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதன் தொடர்ச்சியாக நமது நிறுவன அலுவலர்களுக்கு மார்ச் 2020 மாத சம்பளத்தை முழுமையாக வழங்காமல், அவரவர்களது கிரேடுக்கு  ஏற்ப 30 முதல் 40 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2020 மார்ச் முதல் ஜூன் 2020 வரையிலான நான்கு மாதங்களுக்கான தொழிலாளர்களது ஊதியத்தில் 30 சதவிகிதத்தை குறைக்கவும், இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகை, நிறுவனத்தின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர், 2021-22ல் நிதியாண்டில் சம தவணைகளில் திருப்பி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் வருடம் ஒன்றிற்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 24 நாட்கள் தற்காலிக விடுப்பு நாட்களை, தொழிற்சாலைகள் சட்டப்படி பணிபுரியும் ஒவ்வொரு 20 நாட்களுக்கும் ஒருநாள் விடுப்பு என்ற அடிப்படையில், 15 நாட்களாக குறைக்கவும், 2019 -20 ஆம் நிதியாண்டில் தொழிலாளர்களால் ஈட்டாத விடுப்பு நாட்களுக்கான தொகை மற்றும் அதற்குரிய வெகுமதியையும் வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ஏஐசிசிடியு தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், 
பிரிக்கால் நிறுவனத்தின் அசூர வளர்ச்சி என்பது தொழிலாளியினாலே சாத்தியமானது. கோடிக்கணக்கான ரூபாய் இந்நிறுவனம் ரிசர்வ் தொகையாக வைத்துள்ளது. இதனைக்கொண்டு இந்த நெருக்கடியை பிரிக்கால் நிறுவனம் எளிதாக சமாளிக்க முடியும். இதற்கு மாறாக இந்த ஓரிரு மாத ஊரடங்கு காலத்திற்காக தொழிலாளியின் நான்கு மாத ஊதியத்தை பிடித்தம் செய்வது ஏற்புடையதல்ல.  ஏற்கனவே இத்தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் போனஸ் , நிறுவனத்தின் உண்மையான லாபத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறோம். இன்றுவரை பிரிக்கால் நிர்வாகம் அதற்கான கணக்குகளை காட்டவில்லை. இத்தகைய சூழலில் மே மாதம் வழக்கம்போல் நிறுவனம் இயங்கத் துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கிற நிலையில்  நான்கு மாதம் 30 சதவீதம் ஊதியத்தை பிடிப்போம் என்பதும், இதர சலுகைகளை பறிப்பதும் எவ்வித நியாயமற்றது என்றார். 
ஆயுள் முழுவதும் தொழிலாளி உழைத்து கொடுக்கும் லாபம் மட்டும் தங்களுக்கு வேண்டும். லாபத்தில் நஷ்டம் கூட இல்லை. இலக்கில் நஷ்டம் என்றால்கூட அதன் முழு சுமையையும் தொழிலாளியின் முதுகில் ஏற்றுகிற களவானித்தனத்தை பிரிக்கால் நிறுவனம் கைவிட வேண்டும் என்பதே தொழிலாளர்கள் கொந்தளிப்பின் வலியுறுத்தலாக உள்ளது. 
– அ.ர.பாபு.

;