tamilnadu

img

ஒண்டிவீரன் நினைவுநாளை அரசு விழாவாக கடைப்பிடிக்க வேண்டும் அதியமான் வலியுறுத்தல்

கோவை:
ஆங்கிலேயருக்கு சிம்ப சொப்பனமாக விளங்கிய இந்திய விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 249 ஆவது நினைவு தினத்தையொட்டி கோவையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் வீரவணக்க நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது.  வடகோவையிலுள்ள ஆதித்தமிழர் பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு நிறுவன தலைவர் அதியமான் தலைமை தாங்கினார். முன்னதாக, ஒண்டிவீரன்  திருவுருவ படத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட தலைவர்கள்  மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இதனையடுத்து அதியமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகிறோம். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர். இவருக்கு திமுக ஆட்சியில் மணிமண்டபம் அடிக்கல் நட்டப்பட்டு இன்று நினைவு மண்டபமாக விளங்கி வருகின்றது. ஒண்டிவீரனின் நினைவுநாளை  அரசு விழாவாக கடைப்பிடிக்க வேண்டும். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மத்திய அரசு தபால் தலை வெளியிட வேண்டும். இன்று அவரது நினைவு நாளையொட்டி திமுக அலுவலகமான அறிவாலயத்தில் ஒண்டிவீரனின் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதற்கு ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமுதாயமும் அவருக்கு நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார். 

;