tamilnadu

img

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை செவிமடுக்காத அரசு நிர்வாகம் நியாயம் கேட்கும் மக்களை தடியடி நடத்தி விரட்டுவதா? தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

கோயம்புத்தூர்:
மேட்டுப்பாளையத்தில் சாதிய வன்மத்தோடு கட்டப்பட்ட சுற்றுச்சுவர் அகற்றப்பட வேண்டும் என ஒடுக்கப்பட்ட மக்கள் மனுக்கள் அளித்தபோது அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகம், சுவர் இடிந்து விழுந்து அப்பாவி அருந்ததிய மக்கள் 17 பேர் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்கும் மக்கள் மீது காவல்துறையை கொண்டு தடியடி நடத்தி விரட்டிய சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையத்தில் நடூர் ஏடி காலனியில் சாதிய வன்மத்தோடு கட்டப்பட்ட சுவர் விழுந்து 17 அருந்ததிய மக்கள் பலியாகியுள்ளனர். இக்கோர சம்பவத்தில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமூவேல்ராஜ், மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், கோவை மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் நந்தகோபால் மற்றும் நிர்வாகிகள் நடராஜ், பாலு உள்ளிட்டோர் திங்களன்று நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை  பார்வையிட்டனர். இதன்பின்னர் கே.சாமுவேல்ராஜ் கூறியதாவது,

ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் குரலுக்கு அரசு செவிசாய்க்காத நிலையிலே இதுபோன்ற விபத்து நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தலித் மக்கள் வாழ்கிற பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் இதே நிலையில்தான் உள்ளன. குடியிருப்புகளுக்கு நடுவே டிரான்ஸ்பார்மர், பலவீனமான சத்துணவு மையம், அங்கன்வாடி உள்ளிட்ட கட்டிடங்களும் இம்மக்கள் வாழுகிற பகுதியிலேதான் தற்போதும் உள்ளது. இதுகுறித்து இம்மக்கள் அரசு நிர்வாகத்திடம் அவ்வப்போது கோரிக்கையாக கொடுக்கின்றனர். ஆனால் வலுத்தவன் குரலுக்கு செவிமடுக்கும் அரசு நிர்வாகங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது. இதுபோன்ற மெத்தனத்தால்தான் உயிர்ப்பலிகள் ஏற்படுகிறது. 

தீண்டாமைச் சுவர்
இந்த சுவரை அகற்ற வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கை நியாயம் என உணர்ந்து இருந்தால் இப்போது 17 உயிர்கள் பலியாகி இருக்காது. அரசு நிர்வாகத்தின் அலட்சியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுவரை எழுப்பிய வீட்டின் உரிமையாளர் அருந்ததிய மக்கள் தங்களின் கண்ணில் படக்கூடாது என்கிற ஒற்றைக் காரணத்திற்குத்தான் இந்த சுவரை எழுப்பியுள்ளார் என்பதை கண்கூடாக தெரிகிறது. இது முழுக்க தீண்டாமை சுவர்தான் என்பது நிகழ்விடத்திற்கு வந்த யாவரும் உணர்வர். ஆகவே, இந்த சுவரை எழுப்பியவர் மீது உடனடியாக எஸ்சிஎஸ்டி வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இனியாவது ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வாதார கோரிக்கை முன்வைக்கும் போது அதனை அரசு நிர்வாகங்கள் செவிமடுக்க வேண்டும். சம்பவ இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும். இதேபோல் தலித் மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் பல இடங்களில் மிக பலவீனமாக உள்ளது. இந்த விபத்திற்கு பிறகாவது ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்த மக்களுக்கு நியாயம் கேட்டு போராடினால் போலீசைக் கொண்டு தடியடி நடத்தி விரட்டுவதன் நோக்கம் என்ன? போலீசாரின் இந்த நடவடிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மொத்த குடும்பமே உயிரிழந்த நிலையில் யாரிடம் உடலை ஒப்படைப்பீர்கள்? இன்றே அனைத்து உடல்களையும் பெற்று இறுதியடக்கம் செய்ய வேண்டும் என்று அவசரம் காட்டுவதன் அவசியம் என்ன? இறந்தபோதுதான் எவ்வித மரியாதையுமின்றி இறந்துள்ளார்கள். இறுதியடக்கமாவது மரியாதையாக நடக்கட்டும் என்ற உறவினர்களின் கேள்வியில் என்ன தவறை போலீஸ் கண்டது? மேலும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை பிரேதபரிசோதனை கூடத்தில் உடல்களை வைக்ககூட இடமில்லை. திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன. உடனடியாக இந்த உடல்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரதே பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;