கமுடேசன் காலத்தை 12 ஆண்டுகளாக குறைத்திடுக மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தல்
தருமபுரி, ஜூலை 22- கமுடேசன் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு பேரவைக் கூட்டம், தருமபுரி மருந்து வணிகர் மண்டபத்தில் தோழர்கள் எம்.ராஜமாணிக்கம், எஸ்.குப்பன் ஆகியோர் நினைவரங்கத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பி.சுப்பிரமணி வரவேற்றார். பொருளாளர் எம்.சின்னசாமி அறிக்கையை முன்வைத்தார். அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள் மற்றும் சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் கே.குப்புசாமி, எம்.முனிரத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேரவையில், 75 வயது கடந்த ஓய்வூதியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில், மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி, 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப்பின் மாவட்டத் தலைவராக ஆர்.சுந்தரமூர்த்தி, செயலாளராக ஜி.பி.விஜயன், பொருளாளராக எம்.சின்னசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணை பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணி நிறைவுரையாற்றினார், துணைத்தலைவர் ஆர்.ரகுபதி நன்றி கூறினார்.