tamilnadu

img

ரேசன் கடைகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்றாதே - நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க பொதுக்குழு வலியுறுத்தல்    

ரேசன் கடைகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்றிட முயற்சிப்பதை மாநில அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.    

இச்சங்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எஸ்இடிசி போக்குவரத்து சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மண்டல தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் மண்டல செயலாளர் எம்.ஏழுமலை, பொருளாளர் எம்.திருக்குமார், செயற்தலைவர் வி.ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் என்.ராமன், வி.தேவகுமார் உள்ளிட்ட மண்டல பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தை வாழ்த்தி சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.    

இதில், ரேசன் கடைகளை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. இதனால் ஊழியர் நலன் பாதிப்பதோடு, ஊழலுக்கு வழிவகுக்கும். பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருள்கள் கள்ளச் சந்தைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. கூட்டுறவுத்துறைக்கு மாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கொள்முதல் பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். சுமைப்பணி மற்றும் துப்புரவு தொழிலாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதை கைவிட்டு நிரந்தர தொழிலாளர்களாக பணியில் அமர்த்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் எம்.முத்தையா நன்றி கூறினார்.

;