தினமும் நூறுநாள் வேலை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக. 31- நூறு நாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு தினம்தோறும் வழங்க வேண்டும். சட்டக் கூலியை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் துறையூர் யூனியன் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி, மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த், மாவட்டத் தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் ராஜேஷ், ஒன்றியப் பொருளாளர் சரஸ்வதி ஆகியோர் பேசினர். போராட்டம் நடந்த இடத்திற்கு துறையூர் வட்டாட்சியர் நேரடியாக வந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் திட்டத்தின் கீழ், புதிய அட்டை வழங்குதல் மற்றும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், தினம்தோறும் வேலையும், முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் 35 கிலோ அரிசி, தகுதியின் அடிப்படையில் மேற்படி நபர்களுக்கு அரசால் வழங்கப்படும். வீட்டுமனை பட்டா, முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
