tamilnadu

img

கோவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை

 கோவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை சாதிய வன்மத்துடன் அடித்துக் கொன்ற ஆதிக்க சாதியினரை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் முற்போக்கு அமைப்பினர் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை, பொன்னாங்காணி என்ற பகுதியை சேர்ந்தவர் ராமு. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரை அப்பகுதியில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நபர்கள் சிலர் சாதிய வன்மத்துடன் தொடர்ந்து தகறாரில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன்தொடர்ச்சியாக கடந்த பிப்.7 ஆம் தேதியன்று ஆதிக்க சாதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ராமுவின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி  புகுந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராமு, ஆபத்தான நிலையில்  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று இரவு ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சாதிய வன்மத்துடன் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய சாதிய ஆதிக்க சக்தியினர் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை கொல்லப்பட்ட ராமுவின் உடலை பெறமட்டோம் எனக்கூறி ராமுவின் உறவினர்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட தலித், முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தோர் வெள்ளியன்று கோவை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

.  இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் இரா.ஆறுச்சாமி, திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி கலையரசன், ஆதித்தமிழர் பேரவையின் ரவிக்குமார், திராவிடர் விடுதலை கழகத்தின் நேருதாஸ் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று குற்றவாளிகளை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.  

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை டிஐஜி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உடனடியாக உரிய நிவாரண உதவி வழங்கிட வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இருப்பினும், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை ராமுவின் உடலை பெற மாட்டோம் என அவரது உறவினர் உறுதிபட தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

;