tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிறைவு செந்தொண்டர் பேரணியை வாழ்த்தி சிபிஎம் முழக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிறைவு செந்தொண்டர் பேரணியை வாழ்த்தி சிபிஎம் முழக்கம்

சேலம், ஆக. 18 – சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு திங்களன்று மாபெரும் பேரணி, பொதுக்கூட்டத்தோடு நிறைவு பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் நிறைவாக திங்களன்று செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணி பிரபாத் பகுதியில் உள்ள பெரியார் வளைவு முதல் துவங்கி, பழைய பேருந்து நிலையம் போஸ் மைதானத்தில் நிறைவடைந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா, இரா.முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் பேரணி பழைய பேருந்து நிலையம் அருகில் வருகிறபோது, செந்தொண்டர் பேரணியை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எ.குமார் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்று வரவேற்றனர். இதில், கட்சியின் கிழக்கு மாநகரச் செயலாளர் பச்சமுத்து, மேற்கு மாநகரச் செயலாளர் கணேசன், வடக்கு மாநகரச் செயலாளர் பிரவீன் குமார், பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர் செவந்தியப்பன், ஏற்காடு ஒன்றியச் செயலாளர் நேரு, அமைப்புக்குழு உறுப்பினர் ஏ. முருகேசன், எஸ் பவித்ரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.