சாலை, சாக்கடை வடிகால் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி கோவை மலுமிச்சம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மலுமிச்சம்பட்டி ஊராட்சி கிளைகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மதுக்கரை ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
இதில்,பொள்ளாச்சி ரோடு - மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகில் சாக்கடை கழிவுநீர் 4 வழி சாலையில் நோய் பரவும் இடமாக மாறியுள்ளது. அதற்கு வடிகால் அமைத்து தர வேண்டும். சிக்னலில் போக்குவரத்து காவலரை பணியமர்த்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். பொள்ளாச்சி சாலையில் நால் ரோடு சந்திப்பில் சிக்னலை சரிசெய்ய வேண்டும். மேலும் அங்கு பொதுக்கழிப்பிடம் ஏற்படுத்த வேண்டும்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டி உள்ள பகுதியில் சாலை அமைத்து 25 வருடங்களாகிவிட்டதால் பல இடங்களில் பழுதடைந்துள்ளது. அதை சரிபடுத்தி தர வேண்டும்.
மதுரை வீரன் கோவில் பகுதி மக்களுக்கான மயான பாதையில் தெரு விளக்கு வசதி. மயானத்தில் தெரு விளக்கு வசதி தண்ணீர் வசதி, தாங்குமிடம் அமைத்து மயானத்தை சீர்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எம்.பஞ்சலிங்கம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.மணி. கே.வரதராஜ். டி.கே.ஆழ்வார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.