tamilnadu

img

7 ஆண்டுகளாக பாலியல் குற்றம் புரிந்தோரை ஏன் தண்டிக்கவில்லை?

கோவை, ஏப் 15-பொள்ளாச்சியில் 7 ஆண்டுகளாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களை காவல்துறையும், தமிழக அரசும் ஏன் தண்டிக்கவில்லை என திரைக்கலைஞர் ரோகிணி கேள்வி எழுப்பினார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து திங்களன்று துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் திரைக்கலைஞர் ரோகிணி வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, ஜிஎஸ்டியால் கோவையில் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 5 ஆண்டுகள் ஆண்டவர்களுக்கு இது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்பது தெரிய வேண்டாமா? இப்போது ஜிஎஸ்டி வரியைக் குறைப்போம் என்கிறார்கள். இதேபோல், தமிழ்நாட்டிற்கு மட்டுமே 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வருகிறார்கள். இதன்மூலம் நம் விவசாயத்தையும், வாழ்க்கையையும் அழிக்கப் பார்க்கிறார்கள். கோயமுத்தூரில் தண்ணீரைக் கூட சூயஸ் என்ற தனியார் கம்பெனிக்கு குடுத்திட்டாங்க. மேலும், நீட் வேண்டாம் என்கிறோம். நல்ல டியூசன், ஸ்பெசல் கிளாஸ் எடுத்துக் கொண்டவரும், ஏழை, எளிய மாணவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு வைத்தால் எப்படி ஜெயிப்பது.


வெறும் காலில் ஓடுபவருக்கும், நல்ல ஷீ சாக்சுடன் ஓடுபவருக்கும் ஒரே தேர்வா? இதனால்தானே அனிதாவையும், பிரதிபாவையும் இழந்து விட்டு நிற்கிறோம். இவ்வாறு தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக ஆட்சி நமக்கு வேண்டாம் என முடிவுஎடுக்க வேண்டும். என்னைப் போன்ற கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் சார்பில் பாஜக அரசு வேண்டாம் என ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளோம். எப்பொழுதும் இப்படி நடந்ததில்லை. இப்படி கூறினால் ஏன்டி இந்தியன் என்கிறார்கள். இந்துக்களுக்கு எதிரி என்கிறார்கள். இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கொலையும் செய்கிறார்கள். இவ்வாறு கவுரி லங்கேஷ், தபோல்கர் போன்றவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்னுடைய மதத்தைச்சொல்லி கொலை செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. ஆகவே, தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை, எளிய மக்கள் உட்பட அனைவரும் சேர்ந்து வாழும் சூழல் உருவாக பாஜக அரசை அகற்ற வேண்டும். இதேபோல், ஈவ் டீசிங் செய்தாலே தண்டிக்கிற காவல்துறையும், அரசும் பொள்ளாச்சியில் 7 வருடமாக இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை ஒன்னும் தண்டிக்கல. மாறாக, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்தேன் என்பதற்காக ஆன்டி இந்தியன் என்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தால் இந்துக்களுக்கு எதிரிஎன்கிறார்கள் என்றார். மேலும், இவை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்ட விசயங்கள்தான். நானும் அதைத்தான் சொல்கிறேன். மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தோழர்கள் தான் வருவார்கள்.


கம்யூனிஸ்ட்கள் நேர்மையான மனிதர்கள் என்று எல்லா கட்சிகாரருக்கும் தெரியும்.ஆகவே, நீங்க எந்த கட்சியில வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் வரும் ஏப்.18 ஆம் தேதி தவறாமல் வாக்களியுங்கள். அதுவும், நேர்மையான வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு மனசாட்சியுடன் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள். கோயமுத்தூரிலிருந்து தோழர் பி.ஆர்.நடராஜன் நாடாளுமன்றத்திற்கு சென்றால், இத்தொகுதி மக்களின் பிரச்சினைகளைப் பேசுவார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பார். இந்தியாவிற்கு எது நல்லது என வலியுறுத்துவார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்த பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், திமுக நிர்வாகிகள் குமரேசன், மாலதி, சம்பத், தமிழ்செல்வி, முரளிபிரகாஷ், தன்ராஜ்,பாஷா, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பரமசிவம், கல்யாணசுந்தரம், சிபிஐ சிவசாமி மற்றும் மதிமுக சார்பில் வைகோ நம்பி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

;