உடுமலை, மார்ச் 3- அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சிஏஏவை திரும்ப பெற வலியு றுத்தியும், என்ஆர்சி, என்பிஆர் க்கு எதிரா கவும் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் வலியுறுத்தியும், குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தலை நகர் தில்லியில் அமைதியான முறையில் போராட்டம் வந்த நிலையில், ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் தொழில் முறை ரவுடிகளுடன் கொடிய வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதனால் 48 உயிர்கள் பலியாகின. இதற்குக் காரணமாக இருந்த மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தில்லி காவல்துறை யையும் கண்டித்து அனைத்து முஸ்லீம் கூட்டமைப்பு சார்பில் உடுமலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம். சையிது ஈஸா பைஜி தலைமை வகித்தார். இதில் உடுமலை, மடத்துக்குளம் வட்டார ஜமா அத்துல் உலமாசபை, அனைத்து பள்ளி வாசல்கள் நிர்வாகிகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஆயக்குடி முகமது பாரூக், இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத்தலைவர் தடா.ரஹீம், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சூர்யா, வழக்கறிஞர் பெரியார் தாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.