tamilnadu

திருப்பூர் அதிமுக வேட்பாளர் விதிமீறல் அதிமுகவினர் வாக்குவாதம், தகராறு

திருப்பூர், ஏப். 18 - திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வாக்களித்துவிட்டு, அந்த இடத்தில் நின்றபடியே தேர்தல் நடத்தை விதிமுறைக்குப் புறம்பாக இரட்டை விரலை உயர்த்தி இரட்டை இலைச் சின்னத்தை காட்டினார். இதற்கு வாக்குச்சாவடி முகவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவரும், அவரது கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் எதிர்ப்புத் தெரிவித்த வாக்குச்சாவடி முகவரையும் தாக்க முற்பட்டனர்.திருப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். இவர் திருப்பூர் முருங்கப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழனன்று காலை குடும்பத்துடன் வாக்களிக்க வந்தார். அப்போது அவருடன் அதிமுகவினர் சிலரும் வந்தனர். ஆனந்தன் வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்கச் சென்றபோது, விதிமுறைக்குப் புறம்பாக அதிமுகவினரும் அவருடன் உள்ளே சென்றனர். இதற்கு அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி வாக்குச்சாவடி முகவர் சக்தி எதிர்ப்புத் தெரிவித்தார். எனவே மற்றவர்களை வெளியேறும்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறினர். 


இந்நிலையில் ஆனந்தன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்துவிட்டு இடது கையில் மை வைத்த விரலை காண்பித்தார். அத்துடன் விதிமுறைக்குப் புறம்பாக வலதுகையில் இரட்டை விரலை உயர்த்தி இரட்டை இலைச் சின்னத்தையும் காட்டினார்.இதைப் பார்த்த மற்ற கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனந்தனும் சேர்ந்து கொண்டு மாற்றுக் கட்சி முகவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் வாக்குச்சாவடிக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாற்றுக் கட்சி முகவர் சக்தியை அதிமுகவினர் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சமாதானப்படுத்தினர். விதிமுறை மீறிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் சமரசம் செய்து வைத்ததற்கு மாற்றுக் கட்சி முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.இதனால் வாக்குப்பதிவு சிலநிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. காலையிலேயே ஆர்வத்துடன் அங்கு வாக்களிக்க வந்திருந்த வாக்காளர்கள் இதனால் சிறிது நேரம் காத்திருக்க நேரிட்டது. பிற்பாடு அவர்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

;