tamilnadu

img

வெங்காய விலையை தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்வு சிறந்த மாநிலமே இப்படின்னா - மற்ற மாநிலங்களின் நிலை!

வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வருகிற நிலையை தாண்டி வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த அளவிற்கு தாறுமாறாக உயர்ந்துள்ளது வெங்காயத்தின் விலை. இதுபோன்ற பொருட்களின் விலை இயல்பாகவே ஏறும் பிறகு இறங்கும். ஆனால் வெங்காய விலை கடந்த ஒரு மாதமாக இறங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்நிலையில் சமையல் எண்ணெய், காய்கறி, மளிகைப் பொருட்களின் விலையும் கிடு கிடுவென உயர்ந்து வருவதால் சமையலுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளின் பாதிப்பால் நாடு முழுவதும் பல்வேறு உற்பத்தித் துறைகள் கடும் நசிவை சந்தித்தன. இதன் தொடர்ச்சியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருமளவு குறைந்தது. இதன் தாக்கம் பெரிய நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்குறைப்பு, வேலை நேர குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. நாடு முழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நசிவு போன்றவற்றால் மக்களின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்துள்ளது. கோவை போன்ற தொழில் நகரங்களில் உள்ள வணிக தெருக்களில் எந்நேரமும் மனிதக் கூட்டம் குறைவில்லாமல் இருக்கும். ஆனால் தற்போது பண புழக்கம் இல்லாததால் கடைவீதிகளில் மக்கள் கூட்டமின்றி வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகள் வெறிச்சோடிய நிலையில், தற்போது சமையல் பொருட்களின் விலையும் கடுமையாக உயரத்தொடங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த நவம்பர் மாதம் முதல் வெங்காய விலை கடும் உயர்வை சந்தித்தது. கிலோ ரூ.25க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூ.300 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.110 லிருந்து தரம் வாரியாக 200 வரை விற்பனையாகிறது. இதேபோல் பூண்டு கிலோ ரூ.240க்கு விற்பனையாகிறது.  சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் மற்றும் பூண்டு விலை உயர்வு நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்தது.  இந்நிலையில் சமையல் எண்ணெய் விலை உயர்வு தற்போது பேரிடியாக விழுந்துள்ளது. மற்ற எண்ணெய்களைவிட விலை குறைவு என்பதால் பொதுமக்கள் பாமாயிலை சமையலுக்கு அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் சிறிய அளவிலான டீக்கடைகள், ஓட்டல்களில் பாமாயிலின் பயன்பாடே அதிகமாக உள்ளது. ஆனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயிலின் விலை 35 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் லிட்டருக்கு ரூ.20க்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.70,75,78 என ரக வாரியாக மொத்த மார்க்கெட்டில் விற்கப்பட்டு வந்தது. இவை தற்போது ரூ.80,85,88 ஆக உயர்ந்துள்ளது. 10 லிட்டர் கொள்ளவுள்ள பாமாயில் பெட்டி ஒன்றுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.90 முதல் ரூ.98 வரை ரக வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் விலை உயர்வை தொடர்ந்து இதர சமையல் எண்ணெய்களின் விலையும் உயரும் வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  இந்திய அளவில் எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பு சுருக்கம், இறக்குமதி எண்ணெய்க்கு அதிக வரி போன்ற காரணங்களால் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல காரிப் மற்றும் ரபி பருவத்தில் எண்ணெய் வித்துகளின் சாகுபடி பெருமளவு குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பால் விலை உயர்வையடுத்து பேக்கரிகள் டீயின் விலையை உயர்த்தியிருந்தது. தற்போது எண்ணெய் விலை உயர்வால் பலகாரங்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இதேபோல் வரமிளகாய் எனப்படும் மிளகாய் வத்தல் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ மிளகாய் வத்தல் ரூ.95 முதல் ரூ.105 வரை விற்பனையானது. தற்போது ரூ.150 முதல் ரூ.155 வரை விற்கப்படுகிறது. மிளகாய் வத்தல் விலை கிலோவுக்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உளுத்தம் பருப்பு விலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏறுமுகம் கண்டுள்ளது. மொத்த விற்பனையில் கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டு வந்த உளுத்தம் பருப்பு தற்போது கிலோ ரூ.115 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. பச்சைப்பட்டாணி விலை கடந்த 2 வாரத்தில் மட்டும் கிலோவுக்கு 50 ரூபாய் அதிகரித்து மொத்த விற்பனையில் ரூ.120க்கு விற்கப்படுகிறது. அதேபோல் பாசிப்பயறு, பாசிப்பருப்பு ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. காய்கறிகளை பொறுத்தவரை அவரை, பாகற்காய், முருங்கை, புடலங்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகியவற்றின் விலை கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே பருப்பு உள்ளிட்ட பொருட்களை கிலோவில் வாங்கி வீட்டில் வைத்திருந்த நிலை மாறி தற்போது 100, 200 கிராம் அளவில் அவ்வப்போது சமையலின் தேவைக்கேற்ப பொருட்களை வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  விருது வாங்கினால் மட்டும் தமிழகம் சிறந்த மாநிலம் ஆகாது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து மக்களின் முகத்தில் மலர்ச்சி ஏற்படுத்தினால் மட்டுமே சிறந்த மாநிலமாகும் என்பதே நிதர்சனம். ஆட்சியாளர்கள் இதனை உணர்வதே தற்போதைய தேவை... - அ.ர.பாபு

;