tamilnadu

தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

திருப்பூர், ஏப். 10 -பட்டதாரி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வழங்கும் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் அடிப்படையில் பட்டதாரி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக் கால, ஓய்வூதிய கால நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கும்படி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் செ.நடேசன் வலியுறுத்தி உள்ளார்.1988 ஜூன் 1ஆம் தேதிமுதல் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அமலாக்கப்பட்டது. அதன்படி ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை உதவி ஆசிரியர்கள் மற்றும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு மேற்படி ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை உதவி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரேவித ஊதிய விகிதமே அமலாக்கப்பட்டு வந்தது.மத்திய அரசு ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.


முன்னதாக இவர்களில் பலர் இடைநிலை உதவி ஆசிரியர்களாக, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தலைமை ஆசிரியர்களாக ஆனபின்னும், பழைய மாநில அரசின் ஒரே ஊதிய விகிதத்தின் அடிப்படையில் அவர்கள் பெற்று வந்த ஊதியத்தில், மத்திய அரசின் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் தலைமை ஆசிரியர் தகுதி நிலையில் பணியாற்றிய பிறருக்கும் இவர்களுக்கும் ஊதிய வேறுபாடு நிலவியது.எனவே பட்டதாரி தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்களுக்கு முந்தைய பணிக் காலத்தைக் கணக்கில் கொண்டு தேர்வு நிலை / சிறப்பு நிலைத் தகுதி வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசின் ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர் கூட்டணி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதையேற்று மாநிலஅரசு பள்ளிக் கல்வி (ஜி) துறை (14.08.2009) என்ற அரசாணை எண் 210 பிறப்பித்தது. எனினும் அதை அரசு அமல்படுத்தவில்லை. எனவே 65 ஆசிரியர்கள் இந்த ஆணையை அரசு அமல்படுத்த உத்தரவிடுமாறு நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தனர். இதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் வழக்குத் தொடராத பலருக்கு அரசு தேர்வு / சிறப்பு நிலை வழங்கவில்லை.எனவே தமிழக அரசை எதிர்த்து 2012ல் செ.நடேசன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார். இதில் 2015 ஜூன் 18 அன்று ஆசிரியர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.


ஆனால், தமிழக அரசு இந்தத் தீர்ப்பையும் அமலாக்காமல் உயர்நீதி மன்றத்தில் 2017ல் மேல்முறையீடு செய்தது. அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து செ.நடேசன் உள்ளிட்ட 115 ஆசிரியர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளை உயர்நீதி மன்றம் ஒருங்கிணைத்து விசாரணைக்கு ஏற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிசாத் ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த ஜனவரி 3ஆம் தேதி தமிழக அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.‘இந்தத் தீர்ப்பு கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் 1.6.1988ல் நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு அன்றைய தேதியில் தேர்வுநிலை/ சிறப்பு நிலை ஊதியத்தை நிர்ணயம் செய்திட வேண்டும். அவர்களுக்கான பணிக் கால நிலுவை மற்றும் ஓய்வூதிய நிலுவைகளை எட்டு வார காலத்துக்குள் வழங்க வேண்டும், என்று இந்த தீர்ப்பில் ஆணையிடப்பட்டுள்ளது.நீதிமன்றம் நிர்ணயித்த எட்டு வார காலக்கெடு 2019 மார்ச் இரண்டாவது வாரத்திலேயே முடிந்துவிட்டது. எனினும் தமிழக அரசு இன்னும் இதில் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. குறிப்பாக, வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளான நிலையில், மேலும் தாமதிக்காமல் அந்த ஆசிரியர்களுக்குச் சேர வேண்டிய, பணிக் கால மற்றும் ஓய்வூதிய கால நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்கிடுமாறு ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளரும், இந்த வழக்கை முன்னின்று நடத்தியவருமான ஆசிரியர் செ.நடேசன் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

;