tamilnadu

img

உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும் ஜனநாயகம் காக்க வாக்களித்த மாற்றுத்திறனாளிகள்

 திருப்பூர், ஏப். 18 -திருப்பூரில் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் உடல் நிலை ஒத்துழைக்காதபோதும் ஜனநாயகம் காக்க வாக்களிக்க வேண்டும் என்ற உந்துதலில் மாற்றுத்திறனாளி சரவணன் ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.திருப்பூர் பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (50). இவருக்கு சிறு வயதிலேயே முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். தற்போது அமரக்கூட முடியாமல் படுத்தபடியே இருக்க வேண்டி இருக்கிறது. இவர்களது குடும்பத்தார் சமீபத்தில் வீடு மாறி சொர்ணபுரி அவென்யூ பகுதிக்குச் சென்றுவிட்டனர்.இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இவரே நேரடியாக 1950 என்ற தேர்தல் தொடர்பான இலவச தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார். இவர் தொடர்பான விபரத்தை உறுதிப்படுத்திய அலுவலர்கள், இவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து பெரியார் காலனி மாநகராட்சிப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தவுடன், ஸ்ட்ரெச்சர் படுக்கையில் சரவணனைப் படுக்க வைத்து வாக்குச்சாவடிக்குள் கொண்டு சென்றனர். அங்கு வாக்குச்சாவடி அலுவலர் அவரது பெயரையும், அடையாள அட்டையையும் சரி பார்த்து அவரது கை விரலில் மை வைத்தார். ஸ்ட்ரெச்சரில் இருந்தபடியே அவர் வாக்களிப்பதற்கு அங்கிருந்த இட அமைப்பு இசைவாக இல்லை. எனவே வாக்குச்சாவடி அலுவலர் சரவணனிடம், உங்கள் குடும்ப உறவினர் மூலம் நீங்கள் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து சரவணனின் அக்கா மகன் எம்.தீனதயாளன் பெயரை வாக்களிப்பதற்கு சரவணன் தெரிவித்தார். அதன்படி சரவணன் முன்னிலையில் தீனதயாளன் அவரது வாக்கைப் பதிவு செய்தார்.


மாற்றுத் திறனாளி சரவணன், மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய அரசியல் சூழலில் தான் தவறாமல் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற உறுதியோடு உடல்நிலை ஒத்துழைக்காதபோதும், மன உறுதியோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.அதேபோல் திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் அருகே ஜிஎன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (47). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் நடக்க முடியாமல் வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு ஓய்வில் இருக்கிறார். இவரும் தேர்தல் அலுவலருக்கு தொலைபேசி மூலம் தான் வாக்களிக்க வேண்டும் என்றும், விபத்தினால் நடமாட முடியாத நிலையில் இருப்பதையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இவரது வீட்டுக்கு தேர்தல் அலுவலர் மூலம் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. வாகனத்தில் பூலுவபட்டியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து, இவரை கைத்தாங்கலாக உள்ளே தூக்கிச் சென்றனர். அங்கு கருணாகரன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதேபோல் அரண்மனைப் புதூர் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியிலும் மூதாட்டி ஒருவர் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்து வரப்பட்டு வாக்குப்பதிவு செய்தார்.

;