tamilnadu

குறுக்கு வழியல்ல; அது வழுக்குப் பாறை!

பயிற்சி மையங்களுக்குச் சென்று விசாரிக்கும் பலரும், சில நிமிடங்களிலேயே கேட்கும் கேள்வி ஒன்றுதான். “சார்.. குறுக்கு வழிகள்லாம் சொல்லித் தருவீங்களா”என்பதுதான் அது. பல ஆண்டுகளுக்கு முன்பாக, “பொருத்துக” கேள்வி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அ, ஆ, இ, ஈ என்பதில் கடைசி பதில் அதாவது “ஈ”தான் பதிலாக இருக்கும் என்று சொல்லித் தருவார்கள். அப்படித்தான் விடையும் பெரும்பாலும் இருக்கும். இப்போது நிலைமை மாறிவிட்டது.இப்படித்தான் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார், “குறுக்கு வழி சொல்லித் தர்றீங்களா” என்று. அப்போது வகுப்பறையில் இருந்த வழிகாட்டியாளரும், உங்களுக்கு எவரெஸ்டு என்ன உயரம் என்று தெரியுமா என்று வினவினார். பயிற்சிக்கு வந்தவரோ, தெரியாது என்றவுடன், முகமலர்ச்சியுடன் வழிகாட்டியாளர் விவரிக்கிறார். எட்டு எட்டா நாலு எட்டு வெச்சா, எவரெஸ்டுல ஏறிடலாம் என்று நினைவு வைத்துக் கொள்ளுங்கள் என்றிருக்கிறார். அவரும் தலையாட்டினார். தேர்விலும் அதே கேள்வி வந்திருக்கிறது. கண்ணில் தண்ணீர் வராத குறையாக சிரித்திருக்கிறார் அந்த தேர்வு எழுதுபவர். ஆனால் நான்கு பதில்கள் இருந்தன. அவை 8,848 அடி, 8,848 மீட்டர், 8,848 கி.மீ,., 8,848 மி.மீ என்று இருந்தன. எட்டு எட்டா நாலு எட்டு என்பதை நன்றாக நினைவில் வைத்திருந்த அவர் அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளாததால் அடியா, மீட்டரா என்று கூட கேட்டுக் கொள்ளவில்லை.

பள்ளிக்கூடங்களிலேயே சில குறுக்கு வழிகளைச் சொல்லித் தருவார்கள். எடுத்துக்காட்டாக, சூரிய குடும்பத்தை வரிசையாக நினைவில் வைத்துக் கொள்வதற்காக, My very efficient mother just services us nuts என்பார்கள். ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டால், Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus and Neptune என்று சொல்லி விடலாம். ஆனால் அடிப்படை ஞானத்தைப் பெற்ற பின்னர் குறுக்கு வழிகளைக் கற்றுக் கொள்வது நல்லது. கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைச் சூத்திரத்தைக் கற்றுக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தி விடைகளைக் கண்டுபிடித்த பிறகே, குறுக்கு வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

வடிவேலுதான் ஜஹாங்கீர்

வழுக்கி விடாமல் இருப்பதற்கு மிகச்சிறந்த குறுக்கு வழியாக மனக்கண் பார்வை என்ற உத்தியை நாம் எடுத்துக் கொள்ளலாம். கற்பனை வளத்தை பயன்படுத்தினால் அனைத்தையும் காட்சிப்படுத்திப் பார்க்கலாம். இந்தியாவில் வணிகம் செய்ய ஆங்கிலேயர்கள் முகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றனர். பல தேர்வுகளில் “ஆங்கிலேயர்கள் எந்த முகலாய மன்னரிடம் வணிகம் செய்ய அனுமதி பெற்றார்கள்” என்ற கேள்வி திரும்பத் திரும்ப வந்துள்ளது. “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” திரைப்படக்காட்சியை இதற்கு அப்படியே பொருத்திக் கொள்ளலாம். வடிவேலுதான் ஜஹாங்கீர். அக்கா மாலா, கப்சி விற்க வந்தவர்கள்தான் ஆங்கிலேய பிரதிநிதிகள். நிச்சயமாக நம்மால் மறக்கவே முடியாது.

திரைப்படங்களைப் பார்க்கையில், நமக்கு பாடம் நினைவுக்கு வருமா? வராது. ஆனால், பாடம் படிக்கும்போது திரைப்பட நினைவு வருமா? நிச்சயமாக வரும். நாயகியைத் தூக்கிக் கொண்டு வில்லன் ஹெலிகாப்டரில் பறக்கிறார். நாயகனோ, மாடியில் ஓடியவாறே பாய்ந்து போய் அதைப் பிடித்து இழுத்து கீழே நிறுத்துகிறார். திரையரங்கமே கைதட்டலால் அதிர்கிறது. பொதுவாக, திரைக்காட்சிகளை கேள்விக்கு உட்படுத்தும் பழக்கம் நமக்கில்லை. காவல்துறையா, கடைசியில்தானே வருவார்கள் என்று நமது பொதுப்புத்தியிலும் ஏற்பட்டுள்ளது. புவியீர்ப்பு விசை துவங்கி, விமானம் பறப்பது வரையிலான செய்திகளை நாம் இந்தக் காட்சியை வைத்து உருப்போட்டு விடலாம்.

நீங்கள் தயாரா..?


;