tamilnadu

img

ம.பி.யில் நாமக்கல் ரிக்வண்டி தொழிலாளி மர்ம மரணம்

சேலம், ஏப்.20-மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வந்த நாமக்கல் ரிக்வண்டி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். ரிக்வண்டி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் ரிக்வண்டி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழனன்று வெங்கடாசலம் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சனியன்று சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், வெங்கடாஜலத்தின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் முன்புள்ள சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் வெங்கடாசலம் உடலை ஆம்புலன்சில் வைத்து கொண்டு, அவரது இறப்பில் மர்மம் உள்ளதாகவும், அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த சேலம் மாநகர காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக சேலம் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

;