தருமபுரி, ஜூன் 5-தருமப்புரி அருகே மூக்கனூர் ஊராட்சியில் உள்ள எம்.ஒட்டப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதியில்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் எம்.ஒட்டப்பட்டி கிராமம் உள்ளது.இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் தெருக்களில் கடந்த 15 வருடங்களுக்கு முன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. மண் அரிப்பு மழை நீரால் தற்போது சிமெண்ட் சாலைகள் முற்றிலும் பழுதடைந்து விட்டது. இங்கு எந்த தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் தெருக்களிலேயே சாக்கடை நீர் மாதக்கணக்கில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுடெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு அப்பகுதி மக்கள் உள்ளாகின்றனர்.மேலும், தருமபுரியில் இருந்து கம்பைநல்லூருக்கு செல்லும் சாலை இக்கிராமத்தின் நடுவே உள்ளது. இச்சாலை 1 கிலோ மீட்டர் தொலைவில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இக்கிராமத்தில் பெரும் பகுதிவீடுகளுக்கு தனிநபர் கழிப்பிடம் இல்லை. இதனால், கடந்த 2011 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வாளாகம் அமைக்கப்பட்டு பயன்படுத்தி வந்தனர். இந்த சுகாதார வளாகத்துக்கு தண்ணீர் வருவதில்லை. மேலும் கழிவறை கதவுகள், சிமெண்ட் காரைகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் வாரத்திற்கு ஒரிரு நாட்களே வருகிறது. ஒரு வீட்டிற்கு இரண்டுகுடம் தான், அதுவும் பலருக்குகிடைப்பதில்லை. மேலும் தெருவிளக்குகள் பழுதடைந்து இரவில்இருண்டு காணப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம்முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தார்சாலையை சீரமைக்க வேண்டும். தெருகளில் சிமெண்ட் சாலை புதியதாக அமைக்க வேண்டும். சாக்கடை கால் வாய் அமைக்க வேண்டும். சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.