tamilnadu

img

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யும் மோடி

அவிநாசி. ஏப்.10- தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத மோடி தற்போது ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதாக சிபிஎம்மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் குற்றம்சாட்டியுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுகவேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன் திருமுருகன்பூண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நரேந்திர மோடி ஆட்சியில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற முடியவில்லை. இதன்காரணமாகத்தான் நாட்டினுடைய எல்லைகளை பற்றியும், ராணுவத்தை பற்றியும், பாகிஸ்தானை பற்றியெல்லாம் மோடி பேசுகிறார். எல்லை என்பது ராணுவத்தின் கையில் இருக்கின்றது. திருப்பூரில் மட்டும் கடந்த ஆண்டுகளில் ரூ.48 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்றது. ஆனால், தற்போது ரூ.23 ஆயிரம் கோடிக்கும் கூட ஏற்றுமதி நடைபெறவில்லை. இதேபோல், ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு பின்னால் விசைத்தறி, சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூர் பகுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.முன்னதாக, இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமை வகித்தார். திமுக சார்பில் பழனிச்சாமி, குமார், மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துச்சாமி, வெங்கடாசலம், பாலசுப்பிரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமசாமி, இசாக், காங்கிரஸ் கட்சி தட்சணாமூர்த்தி, மணி, மதிமுக சுப்பிரமணி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் சென்னியப்பன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;