tamilnadu

img

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம், ஏப்.4-மேட்டுப்பாளையம் அடுத்துள்ளசிறுமுகை பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானையொன்று பலியான சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் ஆண் காட்டு யானையொன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அங்கிருந்த வாழைத் தோட்டத்தில் யானை உட்கார்ந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டனர். வனத்துறையினர் மேற்க்கொண்ட முதற்கட்ட ஆய்வில் இறந்த ஆண் யானைக்கு பத்து முதல் பதினைந்து வயதிருக்கலாம் என்றும், இந்த யானையின் இறப்பிற்கு அதன் உடலில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததே காரணம் என கண்டறிந்தனர். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் விவசாயம்செய்வோர் சோலார் மின்வேலிஉள்ளிட்ட எந்த வகை கம்பி வேலியினையும் அமைக்கக்கூடாது, தடுப்புகள் வைக்கக்கூடாது என கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவை யானைகள் நீர் அருந்த வரும் வழித்தடம் என்றும்,இங்கு கட்டப்படும் வேலிகளால் இவற்றின் இயல்பான நடமாட்டம் தடைபடுவதாக கூறி வனஉயிரின ஆர்வலர்களால் தொடரப்பட்ட இவ்வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இச்சூழலிலேயே யானை உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து யானை இறந்து கிடந்த வாழை தோட்டத்து உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது, தான் வாழைத்தோட்டத்தை சுற்றி சூரிய ஒளியில் இயங்கும் சோலார் மின்வேலி மட்டுமே அமைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த வனத்துறையினர், நீரேற்றும் மோட்டாருக்கு வழங்கப்படும் உயரழுத்த மின்சாரத்திலிருந்து தோட்டத்து வேலிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டதா என கண்டறிந்து தெரிவிக்கும் படி கோரப்பட்டது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகளும் சட்டவிரோத மின் பயன்பாடுகுறித்து ஆய்வு நடத்தினர். இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், “மின்வேலியில் சிக்கியதே யானையின் இறப்பிற்கு காரணம். போதிய மழைப்பொழிவு இல்லாமல் சிறுமுகை வனச்சரக பகுதியில் கடும்வறட்சி நிலவி வருகிறது. இதனால்வனத்தை ஒட்டியுள்ள அணையின் நீர்தேக்க பகுதிகளில் தண்ணீர் அருந்த யானைகள் வருகின்றன. இப்படி தாகம் தீர்க்க வந்த யானையொன்றே தற்போது மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதிகளில் கட்டபட்டிருந்த வேலிகளை அப்புறப்படுதினோம். ஆனாலும் சிலர்சட்ட விரோதமாக மின்வேலிகளை அமைத்துள்ளனர். சூரிய ஒளியில் இயங்கும் சோலார் வேலி என்ற பெயரில் அதில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சி வன உயிரினங்களை கொல்வது ஏற்றுக்கொள்ள இயலாது. யானையின் இறப்பு குறித்தஉடற்கூறு ஆய்வின் மருத்துவ அறிக்கை வந்தவுடன் தொடர்புடைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

;