tamilnadu

அறிவிக்கப்படாத மின்வெட்டால் வேதனையில் விசைத்தறியாளர்கள்

ஈரோடு, ஏப். 25-அறிவிக்கப்படாத மின் வெட்டால் ஈரோட்டில் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட, மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை இயக்க மின்சாரம் மிக முக்கியமாகும். ஒரு சில விசைத்தறியாளர்கள் ஜெனரேட்டர் வைத்திருந்தாலும் பெரும்பாலான விசைத்தறியாளர்கள் அரசின் மின்சாரத்தை நம்பியே இருக்கின்றனர். இந்நிலையில், ஈரோடு மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் பராமரிப்பு பணிக்காக, பழுது நீக்குதல் என முன் அறிவிப்பில்லாமல் அடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது.இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், ஈரோடுமாநகராட்சிக்குட்பட்ட சம்பத்நகர், ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி, பன்னீர் செல்வம் பூங்கா, பிரப்ரோடு ஆகிய பகுதிகளில் புதனன்று இரவு 9 மணிக்கு மேல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. அதேபோல், வியாழனன்று காலை 10 மணியளவில் மாநகரப்பகுதிகளில் 4 முறைகளுக்கு மேல் மின்சாரம் தடை செய்யப்பட்டது. சில பகுதிகளில் வேலைகள் நடந்தாலும், வேலைகள் நடக்காத பகுதிகளில் கூட 3 மணி நேரத்திகும் மேல் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

;