tamilnadu

ஈரோடு மார்க்கெட்டுக்கு மாங்காய் வரத்து அதிகரிப்பு

ஈரோடு, ஏப். 24-ஈரோடு மார்கெட்டிற்கு மாங்காய் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. ஈரோடு நேதாஜி பழ மார்க்கெட்டில் மாங்காய் சீசனில் சராசரியாக 25 டன் வரை மாங்காய்கள் விற்பனை ஆகும். தற்பொழுது மாங்காய் சீசன் தொடங்கியுள்ளதால் நேதாஜி பழ மார்க்கெட்டில் உள்ள மண்டிகளில் மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பாலக்காடு, காவேரிப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மாங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரம், கிளிமூக்கு, ருமேனியா, குண்டு போன்ற ரகங்கள் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளது. இதில் செந்தூரம் கிலோ 35 ரூபாய், கிளிமூக்கு 35 ரூபாய், இமாம்பந்த் 100 ரூபாய், பங்கனப்பள்ளி 55 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடை சீசனில் தற்பொழுது மழை பெய்துள்ளதால் மாங்காய்களை வாங்க வியாபாரிகளும், மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஈரோடு நேதாஜி பழ மார்க்கெட்டில் மாங்காய் விற்பனை அதிகரிக்கத் துவங்கி உள்ளது.இதுகுறித்து ஈரோடு நேதாஜி பல மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், மாங்காய் வரத்து கடந்த சில தினங்களாக தான் அதிகரித்துள்ளது. தற்பொழுது வரை 12 டன் அளவில் வரத்து ஆகியுள்ளது. அடுத்த வாரங்களில் சேலம் மல்கோவா, ஊறுகாய்க்கு பயன்படுத்தும் நாட்டு மாங்காய், நீளம், அல்போன்சா போன்ற அனைத்து ரகங்கங்களும் போதிய அளவுக்கு வருகிறது. நாங்கள் மக்களுக்கு கேடு விளைவிக்காத வகையில் புகை மூலம்நான் காய்களை பழுக்க வைத்து விற்பனை செய்கிறோம். இதற்கென நான்கு அறைகள்கட்டப்பட்டுள்ளது. ஒரு கிரேடு 25 கிலோ மாங்காய்களை பழுக்க வைக்க ஒரு ரூபாய்முதல் 2 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறோம். மருந்து போன்ற செயற்கை முறைகளில் மாங்காய்களை பழுக்க வைப்பது இல்லை. இதேபோல் மாம்பழம் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. மாங்காய் தரத்திற்கு ஏற்ப வரக்கூடிய நாட்களில் விலை குறையும் என கூறினார்.

;