தஞ்சாவூர், மே 10-தமிழக கடற்பகுதியில் தற்போது மீன் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர். மீனவர் வலையில் அகப்படும் தேசப்பொடி மீன், கத்தாளை, தாளன்சுறா, முரல் உள்ளிட்ட சிறு மீன்களை வியாபாரிகள் கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வந்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது குறைந்து விட்டது. இதனால் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து குறைந்து விட்டது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அதிராம்பட்டினம் கடைத்தெரு மீன் மார்க்கெட் களையிழந்து காணப்படுகிறது. மீன்கள் வரத்து இல்லாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். வெளியூர் ஏற்றுமதியும் குறைந்து விட்டது.