அவிநாசி, ஏப்.26-அவிநாசியில் நிரந்தரமாக தினசரி மார்க்கெட்ஏற்படுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி பழைய பேருந்து நிலையம் பின்புறம் தினசரி மார்க்கெட் பல வருடங்களாக இயங்கி வந்தன. இங்கு 58 கடைகள் உள்ளன. மூன்றாண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்படும். இந்த ஆண்டுக்கான ஏலம் நடக்க இருந்த நிலையில், மார்க்கெட்டில் உள்ள கடைகள் பழுதடைந்ததால் தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் மாற்றப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதற்கிடையே ஜனவரி மாதம் ரூ.16 லட்சத்திற்கு கந்தசாமி என்பவர் ஏலம் எடுத்தார். இதைத்தொடர்ந்து தினசரி மார்க்கெட் மாற்றம் செய்யப்படாமல் பழைய இடத்திலேயே இயங்கி வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது, புதிய பேருந்து நிலையம் அருகில் தினசரி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றம் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் கூறியது. ஆனால் நிரந்தரமாக அவ்விடமே செயல்படுமா? என தெரியவில்லை. மேலும் 53 கடை அந்த இடத்தில் இயங்குவதற்கு நெருக்கடியாக உள்ளது. கடை அமைப்பதற்கு பணிகள் இன்னும் சரிவர முடியாத நிலையில் உள்ளது. தற்போது செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டில் பகுதியில் அடிப்படை வசதியின்றி உள்ளது. மேலும் தினசரி மார்க்கெட் அவ்விடத்தில் தொடர்ந்து இயங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளன. மார்க்கெட் அருகில் டாஸ்மாக் கடை உள்ளதால், பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் நிரந்தரமான ஒரு இடத்தை தேர்வு செய்து தினசரி மார்க்கெட் அமைத்துக் கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, மின்சார பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த இடத்தில் 53 வியாபாரிகளுக்கு போதுமான கடைகள் அமைக்க முடியும் என தெரிவித்தனர்.