tamilnadu

img

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் முன்னிற்பேன்

கோவை, ஏப்.14- உழவனின் உற்ற தோழனாய் நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் முன்னிற்பேன் என கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு பயணத்தில் உறுதியளித்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் ஞாயிறன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ட தீவிர வாக்குசேகரிப்பு சுற்று பயணத்தை மேற்கொண்டார். கோவை காமாட்சிபுரம் பகுதியில் இருந்து துவங்கிய வாக்கு சேகரிப்பு பயணத்தில் திமுக முன்னாள் அமைச்சரும், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி, நிர்வாகிகள் தளபதி முருகேசன், இருகூர் சந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எம்.சி.மனோகரன், எச்எம்எஸ் தலைவர் ராஜமணி, பொன்னுசாமி, வெங்கிடுபதி, மதிமுக கருணாநிதி, சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் சேகர், கொமதேக பிரிமியர் செல்வம், சோபாமோகன்குமார், சிபிஐ மௌனசாமி, வசந்தகுமார், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மற்றும் டில்லிபாபு, ஆர்.வேலுசாமி, எம்.ஆறுமுகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி இருகூர்,ராவத்தூர், கலங்கள், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், நடுப்பாளையம், பீடம்பள்ளி, பட்டணம், காந்திநகர், சிந்தாமணிபுதூர், ரங்கநாதபுரம் உள்ளிட்ட சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு நிறைவாக சூலூரில் நிறைவடைந்தது.  


முன்னதாக, இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், வடகோவையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காமாட்சிபுரத்தில் மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜர், இருகூரில் விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கம் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். இதனைத்தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் பேசுகையில், இருகூர் மண் இந்திய விடுதலை போராட்டத்தில் ஏராளமான தியாகிகளை உருவாக்கிய மண். போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். ஏனெனில், விடுதலை போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த கூட்டம் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது என்பது துரதிஸ்டம். இதன்காரணமாகவே இவர்கள் இந்திய நாட்டின் அரசியல் சட்ட அடிப்படைகளை தகர்த்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டிய கட்டாயத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. ஆளும் ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்காக விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர். கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, உயர்மின் அழுத்த கோபுரங்களை பதிப்பது, ஆறுவழி, எட்டுவழிச்சாலை என்கிற பெயரால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. இவர்களை எதிர்க்க துணிவில்லாத அரசாக மாநில அரசு உள்ளது. நாட்டின் முதுகெலும்பாய் உள்ள விவசாயிகளை பாதுகாப்பது இன்றைய தலையாய கடமையாக உள்ளது. நான் எப்போது விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் களத்தில் நின்று போராடுபவன். இப்போதும் உழவனின் உற்ற தோழனாய் களத்தில் நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடுவேன் என்றார். முன்னதாக, இந்த வாக்கு சேகரிப்பு பயணத்தின்போது ஏராளமான பெண்கள் ஆராத்தி எடுத்தும், வெற்றிக்கான முழக்கங்கள் எழுப்பியும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். மேலும், இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னம் பொறித்த செங்கொடிகளை ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.



;